ஞாயிறு, 2 ஜூன், 2013

பொதுமக்களாலேயே பிடித்து கொடுக்கப்பட்ட கொலைகாரன் Empee distilleries ஷாஜியை போலீஸ் எப்படி விடுதலை செய்யலாம் ?

சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட
ஷாஜி புருஷோத்தமன்ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
எழும்பூர் மருத்துவமனை அருகில் நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மேல் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்றிய சம்பவம் தொடர்பாக குற்றவாளி, முதலாளி ஷாஜி புருஷோத்தமனின் முன்பிணை மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனித உரிமை பாதுகாப்பு மையம் – சென்னைக் கிளை சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த குறுக்கீட்டு இடை மனு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஷாஜி புருஷோத்தமன் சார்பில் வழக்கறிஞர் டி.எல்.நாராயணன் ஆஜராகி வாதாடினார். காவல் துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சௌமியாஜி ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார்.  காவல் துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் ஷாஜிதான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்று விசாரணையில் தெரிய வந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்து காவல் துறையிடம் சாட்சியம் அளித்துள்ள மூன்று நபர்களும் ஷாஜிதான் கார் ஓட்டினார் என்றுதான் தெரிவித்துள்ளனர் என்றும், மேலும் ஷாஜி குடித்திருந்தார் என்று மருத்துவமனை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேற்கூறிய வாதங்களினால் நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் முன்பிணை கோரும் மனுவினை தள்ளுபடி செய்தார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்திருந்த மனுவில் “தி இந்து“ நாளிதழில் வெளிவந்திருந்த செய்திக் கட்டுரைகளை ஆவணங்களாக தாக்கல் செய்திருந்தோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏழைகளாக இருப்பதாலும், குற்றவாளி மிகப் பெரிய தொழிலதிபராகவும் அந்தஸ்துடைய நபராக இருப்பதாலும் சமூக நோக்கத்தின் அடிப்படையில் முன்பிணை மறுக்க வேண்டும் என்று குறுக்கீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் காவல்துறையின் வாதத்தின் அடிப்படையிலேயே காவல்நிலையத்திற்கும், மருத்துவ மனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது. ஆனால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்? என்பது குறித்தும், ஷாஜி ஏன் விடுவிக்கப்பட்டார்? என்பது குறித்தும் விடையளிக்குமா தமிழக காவல்துறை?
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னைக் கிளை

கருத்துகள் இல்லை: