வியாழன், 6 ஜூன், 2013

தள்ளுவண்டி டிபன் கடைகளுக்கு கெடுபிடி! சிறுவியாபாரிகள் அச்சம்

சென்னை: பிளாட்பாரம் மற்றும் தள்ளுவண்டிகளில் இயங்கும் டிபன்
கடைகளில் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். ஏழை எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கும் இடமாக இருப்பது கையேந்திபவன் எனப்படும் பிளாட்பார மற்றும் தள்ளுவண்டி டிபன் கடைகள். குறைந்த விலைக்கு டிபன் மற்றும் சாப்பாடு கிடைப்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த கடைகளை மொய்க்கின்றனர். இவற்றில் பெரும்பாலான கடைகளில் சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலை காணப்படுகிறது. சாக்கடை, பஸ் நிறுத்த பிளாட்பாரம், மரத்தடி என்று அசுத்தம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலான டிபன் கடைகள் இயங்குகின்றன. சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள்தான் விற்கப்படுகிறது என தெரிந்தாலும் விலை குறைவு என்பதால் கூலித் தொழிலாளர்களுக்கு இந்த கடைகளை விட்டால் வேறு வழி கிடைப்பதில்லை. பெரிய ஓட்டல்களில் ஒரு காபி குடிக்கிற காசில், இங்கே டிபனை முடித்து விடுகின்றனர்.


பிளாட்பார கடைகள் குறித்து பல்வேறு புகார்கள் சுகாதார துறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுகாதாரமற்ற உணவுப்பொருட் களை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிளாட்பார டிபன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பிளாட்பார மற்றும் தள்ளுவண்டிகள் கடைகள் மீதான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் அதிரடி நடவடிக்கையால் சிறு வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: