வெள்ளி, 21 டிசம்பர், 2012

தினமணியின் இந்த மணிமணியான விதிகளைமீறினால் என்ன ஆகும்?

;இன்றைய  தினமணி தலையங்கத்தைப் பாருங்கள் “பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று தொடங்குகிறார்கள். “இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.” என்றும் பணிவுடன் ஒப்புக்கொள்கிறார்கள். “இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்” என்றும் தார்மிகக் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், இரண்டு பத்தி போன பிறகுதான் தினமணி ஜெகஜ்ஜோதியாக ஜொலிக்கத் தொடங்குகிறது.
“பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார்.” அடப்பாவி, இந்த வளர்இளம் பெண் செய்த பாபச்செயல் என்ன? “ தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார்.”
என்ன அறியாமை? போன பத்தியில் அடைப்புக் குறிக்குள் உள்ள கேள்விகளை இங்கே ஒருமுறை அளிக்கிறேன்.
  • இருட்டிய பிறகு ஏன் தனியாகப் போனாள்?
  • அந்த ஆண் நண்பன் யார்?
  • அவள் எப்படிப்பட்ட ஆடைகள் அணிந்திருந்தாள்?
இந்தக் கேள்விகளை அடைப்புக்குள் இட்ட நான் குரூர மனம் கொண்டவன் என்றால், வெளிப்படையாக அடைப்புக்கு வெளியே இவற்றை முன்வைக்கும் தினமணி எப்படிப்பட்டது? அதன் தலையங்கம் எப்படிப்பட்டது? அந்தப் பத்திரிகையின் ‘பத்திரிகா தர்மம்’ எப்படிப்பட்டது?
தினமணி தொடர்கிறது.
“துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?”
தினமணி சில சலுகைகளை வளர்இளம்பெண்களுக்கு அளிக்கிறது. அவையாவன:
  • அவருக்கு ஆண் நண்பர் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிக்கலாம். ஷாப்பிங் மால் செல்லலாம். இரவு விருந்துக்கும்கூடச் செல்லலாம்.
செய்யக்கூடாதது என்ன?
  • பெண்களே இல்லாத பேருந்தில் ஏறக்கூடாது.
  • முரட்டு வாலிபர்கள் மட்டுமே உள்ள பேருந்தில் ஏறக்கூடாது.
  • இரவு வேளையில் ஆபத்தைத் துணைக்கு அழைக்கும் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.
தினமணியின் இந்த மணிமணியான விதிகளைமீறினால் என்ன ஆகும்?
“காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும்”
எனில், தினமணி அந்த வளர்இளம்பெண்ணுக்கு நேர்ந்ததை நியாயப்படுத்துகிறாரோ என்று யாரும் தப்பாக நினைக்கவேண்டாம்.
“இதை இந்த சந்தர்பத்தில் “அசட்டு தைரியம்’ என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது.”
அதே சமயம், முரட்டு வாலிபர்களுக்கு தேவையற்ற வாய்ப்புகளை அளிக்கும் அபகீர்த்தியான செயல்களை வளர்இளம்பெண்கள் தவிர்க்கவேண்டும் என்கிறது தினமணி.
“ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.”
அடுத்து வரும் பத்திகள் பெண்ணியவாதிகள் படித்து கட்டுடைத்து புரிந்துகொள்ளவேண்டியவை.
“உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
“எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்’ என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். “நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
“புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்’ என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?”
இவை கடினமாக இருந்தால், முத்தாய்ப்பான இந்த இறுதிவரிகளைப் படியுங்கள்.
“சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.”
இதுவும் புரியவில்லை என்றால், இது புரிகிறதா பாருங்கள். எல்லாச் சாத்தான்களும் சாத்தான் என்று பெயர் வைத்துக்கொண்டு எழுதுவதில்லை.
0
சாத்தான்  tamilpaper.net

கருத்துகள் இல்லை: