வெள்ளி, 21 டிசம்பர், 2012

அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா? வாகன விபத்து-நெரிசல்

‘பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் ‘அரசு பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். என்று எழுயிருந்தேன். அதை குறிப்பிட்டு பல தோழர்கள், ‘ஏற்கனவே அதிகமான வாகன நெரிசலில் சென்னை தவிக்கும்போது, இதுவும் அதிக நெரிசலை ஏற்படுத்தாதா?’ என்று மெயில் அனுப்பி இருக்கிறார்கள்.
உண்மையில் சாலைகளில் அதிக வாகன நெரிசலை ஏற்படுத்துவது கார்கள்தான். குறிப்பாக காலை வேளைகளில் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள், தங்கள் குழந்தைகளை கான்வென்ட்டுக்கு காரில்தான் அழைத்துச் செல்கிறார்கள்.
ஒரு கான்வென்ட்டில், 500 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அநேகமாக 300 குழந்தைகள் தனி தனி கார்களில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். இப்படி ஒரு பள்ளியிலேயே, ஒரு குழந்தைக்கு ஒரு கார் என்ற விதத்தில் வருவதும்; இதுபோன்றே எல்லா கான்வென்ட்டுகளிலும் நடப்பதினாலேயே சாலை நெரிசல் ஏற்படுகிறது.
பொருளாதார வேறுபாடுகள் குழந்தைகளிடம் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளியில் எப்படி சீருடை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறதோ; அதுபோலவே பள்ளிக்கு வரும் குழுந்தைகள் பள்ளி வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டும். கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்களுக்கு அரசு உத்தரவு இடவேண்டும்.
இந்த முறையால், ‘பள்ளி வாகனத்தில் வரும் குழந்தைகளைவிட காரில் வரும் குழந்தைகள் உயர்ந்தவர்கள்’ என்ற ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் எண்ணத்தை குழந்தைகளிடம் நீக்கும். சாலை நெரிசலையும் போக்கும்.
பொதுவாகவே, சென்னையின் சாலையை சுமார் 80 சதவீதம் இடத்தை கார்களும், மோட்டர் பைக்குகளுமே ஆக்கிரமிக்கின்ற.
ஆனால், மொத்த பயணிகளில் சுமார் 25 சதவீதத்தினர் மட்டுமே கார்களிலும் மோட்டர் பைக்குகளிலும் பயணிக்கின்றனர். மீதமுள்ள 75 சதவீத மக்களின் பயணம் பஸ், சைக்கிள், நடைபயணத்தின் வழியாகத்தான் நடக்கிறது.
ஒரு பஸ்சின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பஸ்சில் 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
கார் கம்பெனிகள் இந்தியாவில் நிறைய துவங்கப்பட்டிருக்கினறன. வெளிநாட்டுக் கார்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டன. வெளிநாட்டுக்கார்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு சகஜமாக அனுமதிக்கப்பட்டபிறகுதான், இந்திய சாலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டன. ஏனென்றால் பல லட்சங்கள், கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள கார்கள்; சாலைகள் சீராக இருந்தால்தான் ஓடும். இல்லயேல் விரைவில் பழுதாகி விடும்.
வெளிநாட்டுக் கார்களுக்காக. அதன் கம்பெனிகளுக்காக போடப்பட்டதுதான் இந்திய தங்க நாற்கர சாலைகள். கார்களின் விற்பனை உயர்வதற்கும் கார்களுக்காகவுமே நகரங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
குறைந்த முன்பணத்தில் மாத தவணை முறையில் கார் வாங்குவது மிக எளிமையாக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் கூட கார்கள் கிடைக்கின்றன. கார், வசதி என்பதையும் தாண்டி ‘நாங்க கார் வைச்சிக்கோம்’ என்கிற அந்தஸ்தின் அடையாளமாகவும் நடுத்தர மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் கார் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் தினம் தினம் பல நூறு புது புது கார்கள் சாலைகளில் வந்து கொண்டே இருக்கிறது. அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
கார் விற்பனையை ஒழுங்குபடுத்துவதும் ஒரே குடும்பத்தினர் பல கார்களை வாங்குவதை கட்டுப்படுத்துவதினால்தான் வாகன நெரிசலை குறைக்க முடியும்.
அதுபோலவே, நிறையபேர் பயணிக்கிற பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவதும், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை முறையாக ஒட்டுவதும் வாகன நெரிசலை மட்டுமல்ல, விபத்துக்களையும் தவிர்க்கும்.
வாகன ஓட்டிகளிடமும், பொறுப்பற்று ஒட்டும் முறையை பரவலாக பார்க்க முடிகிறது.
‘தான் மட்டும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும். அதனால் அடுத்தவன் வாழ்க்கை கெட்டாலும் பரவாயில்லை’ என்கிற வாழ்க்கை பாணியை போலவே, வண்டி ஓட்டுவதிலும் பலர் நடந்து கொள்கிறார்கள்.
முறையற்ற முறையில் அடுத்த வாகனத்தை முன்னேறி, அவர்களை விபத்துக்குள்ளாக்கிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் போகிற பழக்கம், பரவலாகி வருகிறது. இதுபோன்ற அநாகரிகமான முறையில் வண்டி ஓட்டுபவர்களும் வாகன நெரிசலுக்கு காரணமாகிறார்கள்.
ஆக, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனியான பஸ்களை இயக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்வரையாவது அதை அமல்படுத்த வேண்டும்.
முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு தங்களை தாண்டி சென்று நிற்கிற பஸ்சை ஓடிபோய் ஏற முயற்சிப்பதும், ஏறி கொண்டிருக்கும் பேதே பஸ் புறப்படுவதும் அதனால், அந்தக் குழந்தைகள் தடுமாறுவதை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
தங்கள் உயிரை பணயம் வைத்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இது முறையா?
இதெற்கு சரியான தீர்வு. தமிழகம் முழுவதிலும் இருக்கிற அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரையாவது அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனி தனியான அரசு போக்குவரத்துகளை இலவசமாக இயக்க வேண்டும். /mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: