ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பெனசிர் கொலை வழக்கில் முஷாரப்பை கைது செய்ய இன்டர்போலுக்கு 2வது கடிதம்

இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய, சர்வதேச போலீஸ் இன்டர்போலுக்கு பாகிஸ்தான் அரசு 2வது முறையாக கடிதம் அனுப்பி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. Ôபெனசிருக்கு கொலை மிரட்டல் இருந்தும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லைÕ என்று அப்போதைய அதிபர் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தானில் இருந்து லண்டனில் தஞ்சம் அடைந்தார் முஷாரப். அவரை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், அவரை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லை என்று கூறி கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது. இதனால், பெனசிர் புட்டோ வழக்கில் முஷாரப்பை கைது செய்ய வேண்டும் என்று கோரி பிரான்சில் உள்ள சர்வதேச போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியது.
ஆனால், முஷாரப்புக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கடிதத்தை இன்டர்போல் திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தகுந்த ஆதாரங்களுடன் 2வது முறையாக இன்டர்போலுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதில், அமெரிக்க பத்திரிகையாளர் மார்க் சீஜெல் கூறிய தகவல்கள் மற்றும் பெனசிர் புட்டோவுக்கு முஷாரப் அனுப்பிய இமெயில் கடிதங்களின் தொகுப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனால், முஷாரப் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://www.tamilmurasu.org/index.asp

கருத்துகள் இல்லை: