செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது

 மாயவலையில் விழ வேண்டாம்
சென்னை: "கூடங்குளம் அணு மின் நிலையத்தால், மீனவர் வாழ்வாதாரத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடையவர்களின் மாயவலையில் விழ வேண்டாம்; எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் எதிர்ப்பாளர்களை போலீசார் தடுத்தது, தாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலர் ராஜகோபால், டி.ஜி.பி., ராமானுஜம் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.


கூட்ட முடிவில், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி, கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் திறனில், இரு அணு மின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. அணு மின் நிலையம் பாதுகாப்பானது தான் என்றும், அச்சப்படத் தேவையில்லை என்றும், இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுனர் குழு அளித்தது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை, உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும், இந்தாண்டு, மார்ச் 19ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பணிகள்
வேகமாக நடந்து வந்தன.
போலீஸ் தாக்கு ஏன்?

இதன்பின், அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அணு மின் நிலையப் பணிகளை தொடர, கோர்ட் அனுமதியளித்தது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பினையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது பொருத்தமானதாகாது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், எரிபொருள் நிரப்பும் பணி துவங்கப்பட உள்ளதையடுத்து, இடிந்தகரையைச் சேர்ந்தவர்கள் முற்றுகையில் ஈடுபடத் திட்டமிட்டனர். இதையறிந்த போலீஸ், அணு மின் நிலையம் செல்லும் வழிகளான, தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக்கிணறு ஆகிய இடங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.ஆனால், போராட்டக்காரர்கள் இவ்வழிகளை தவிர்த்து, கடற்கரை வழியாக அணு மின் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் முற்றுகைப் போராட்டத்தில், கடந்த, 9ம் தேதி ஈடுபட்டனர். அவர்களை முன்னேற விடாமல் போலீசார் தடுத்தனர். தொடர்ந்து, நெல்லை கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்வதும் மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். நேற்று காலை அதிக எண்ணிக்கையில் கூடியதுடன், காலை 11:30 மணிக்கு, போலீசாரை கட்டையால் தாக்கினர். தாக்குதலில் சில போலீசார் காயமடைந்தனர். எனவே, தங்களையும், அணு மின் நிலையத்தையும் காப்பாற்ற, வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்.
ரூ.5 லட்சம் நிதி:


கூடங்குளம் அணு மின் நிலையத்தால், மீனவர் வாழ்வாதாரத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும்இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் வீழ வேண்டாம். மிகவும் பாதுகாப்புடன் விளங்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அணு மின் நிலையம் விரைவில் இயங்க, தேவையான ஒத்துழைப்பை நல்குங்கள்.இது தொடர்பாக, தூத்துக்குடி, மணப்பாடு தற்காலிக சோதனைச் சாவடிக்கு, ஒரு கும்பல் தீ வைத்து, போலீசாரையும் தாக்கியது. இதில், தற்காப்புக்காக போலீஸ் ஒருவர் சுட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இப்பிரச்னை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: