திங்கள், 10 செப்டம்பர், 2012

ஆர்வம் மட்டும் போதும் ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 8


இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.
எனில், ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஒருவர் மீதிருந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரும்போது. இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போது (அவ்வாறு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் விருப்பம்) அத்தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சாத்தியமாகாமல் போகலாம்.
நெகடிவ் விஷயம் என்றபோதும், இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு தொழிலுக்கு வளர்ச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது என்பதால்தான். தொழில்முனைவோருக்குச் சங்கடங்கள் ஏற்படலாம், விபத்து நேரலாம், மரணம் சம்பவிக்கலாம். ஆனால், தொழில் சிந்தனைக்கு எந்த இக்கட்டும் நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வி.சி.ஆர் வீடியோ காசெட்டுகளை வாடகைக்குக் கொடுக்கும் பல கடைகள் நல்ல லாபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. மக்கள் வீட்டில் உட்கார்ந்து குடும்பத்தோடு காசெட் போட்டு படம் பார்க்கும் வழக்கம் அப்போது அதிகம் இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் குறைந்தது அறுபது சாட்டிலைட் சானல்கள் வந்துவிட்டன. இன்று வீடியோ டேப்பை யாரும் வாடகைக்கு எடுப்பதில்லை என்பதால் காசட் வியாபாரம் செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அறிவுள்ள சிலர் மாறும் சூழலுக்குத் தக்கவாறு சிடிக்குத் தாவினர்.
0
சிறு தொழிலில் ஈடுபடுவதற்குத் தோதான வயது எது? இந்தக் கேள்விக்கான விடை, அப்படியொரு வரையறை எதுவும் இல்லை என்பதுதான். ஆர்வம் இருந்துவிட்டால் வயதோ, கல்வித் தகுதியோ ஒரு தடையல்ல. இருந்தாலும் கூடுதலாக கல்வியறிவு என்பது ஒரு முழுமையான திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றால் அதில் தவறில்லை. அதே சமயம் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு முன்பு, சில காலம் கட்டாயமாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவது நல்லது. காரணம் எந்தவொரு தொழிலையும் மற்றவர் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பணியைக் கற்றுகொள்ளுவது, தொழிலைக் கவனிப்பது அனுகூலமானதாகும். Learning business at other’s expenses என்று சொல்வார்கள்.
இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். மிகப் பலர், பகுதி நேரத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட ‘சைட் பிசினஸ்’ தவறானது. ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும்போது, சுயதொழில் ஆர்வமும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில், பணியாற்றும் நிறுவனத்துக்கு உட்பட்ட எல்லா வேலைகளையும் கவனிப்பதும் அறிந்து கொள்வதும் நல்ல உத்தியாகும்.
நீங்கள் ஈடுபட நினைக்கும் தொழில் வேறாக இருந்தாலும், எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பொதுவாக சில அம்சங்கள் உண்டு. அந்த அம்சங்கள் நம்மை மெருகூட்டக்கூடியவை. இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
நான் பணிபுரிந்த இடங்களில் எனக்கு மேலாளராக, உதவி மேலாளராக இருந்த பலரிடமிருந்தும் பல நுணுக்கமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அது பிற்காலத்தில் எனக்கு உதவியது. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பணம் ஈட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர். எளிதில் பணம், விரைவில் பணம் என்பது நடைமுறை சித்தாந்தமாகிவிட்டது. இந்த சித்தாந்தம், அரசியல், சினிமா, இரண்டு துறைகள் அல்லாமல், (அந்தத் துறைகளிலும் ஒரு சிலருக்கு, எல்லோருக்குமல்ல) மற்ற தொழில்களுக்கு அறவே பொருந்தாது. விதை விதைத்தவுடன் அறுவடைக்கு ஆசைப்படும் மனோபாவம், தொழில் முனைவோருக்கு இருக்கக்கூடாது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, கையிருப்பை ஏற்படுத்திக்கொண்டு, நல்ல சந்தர்பத்துக்காக ஆற்றின் கரையோரம் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல் தவம் இருக்கவேண்டும். ஏனென்றால், சுய தொழில் என்பது ஒரு நிமிடத்தில் ஆசைப்பட்டு, அடுத்த நிமிடத்தில் ஆரம்பித்து, அதற்கடுத்த நிமிடத்தில் செல்வந்தனாக மாறுவது என்பதல்ல. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமான விஷயம்.
குறைவற்ற வாழ்க்கையே வாழவேண்டும் என்றால், தொழிலில் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். முதலில் சிறிது காலமாவது தொழிலாளியாக இருந்து, பின்னர் முதலாளியாக மாறுவது தொழிலுக்கு நன்மையைத் தரும்.
0
நம் சமூக அமைப்பில், பெண்களுக்குள்ள பொருளாதாரச் சுதந்திரத்தைப் பற்றியும் சிந்தித்தே ஆக வேண்டும். மணமாகாத பெண் என்றால், தொழில் தொடங்குவதற்கு தந்தையிடமிருந்து முதலீட்டுப் பணத்தை எதிர்பார்ப்பது சிக்கலாகவே இருக்கும். பெரும்பாலான பெற்றோர், அடிப்படைக் கல்வி, மருத்துவம், மற்றும் திருமணச் செலவு இவற்றுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பதற்கு விரும்புவர். ‘தனியாகத் தொழில் தொடங்க வேண்டும், முதலீடு வேண்டும்’ என்றால் ‘வேண்டாத வேலை எல்லாம் எதற்கு?’ என்ற விமரிசனம் மட்டுமே பலமாக எழும்.
மணமான பெண்ணாக இருந்தால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறவேண்டும். இது மிகவும் சிக்கலான விஷயம். அப்படியானால், பெண்கள் தொழில் தொடங்குவது எப்படி?
நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.
0
தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.
வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: