செவ்வாய், 11 செப்டம்பர், 2012

குஜராத்தில் தே.ஜ., கூட்டணி உடைந்தது:ஐ ஜனதா தளம் தனித்தே போட்டி

புதுடில்லி: ""தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தாலும், குஜராத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தனித்தே போட்டியிடுவோம்,'' என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறினார்.
குஜராத்தில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வராக உள்ள நரேந்திர மோடிக்கும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவுகிறது. நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள், நிதிஷ் குமாரும், சரத் யாதவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல், விரைவில் நடக்கஉள்ளது.
இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் அளித்த பேட்டி: குஜராத் சட்டசபை தேர்தலில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து, எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவு எடுப்போம். குறைந்தது, 100 தொகுதிகளிலாவது போட்டியிடுவோம். மத்தியிலும், மற்ற மாநிலங்களிலும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தாலும், குஜராத் சட்டசபை தேர்தலில், அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட மாட்டோம்; தனியாகவே வேட்பாளர்களை நிறுத்துவோம். குஜராத்தில் மட்டும், ஏன் தனித்துப் போட்டியிடுகிறோம் என்ற கேள்வியை, எத்தனை முறை கேட்டாலும், அது தொடர்பாக எந்த பதிலும் அளிக்க மாட்டேன். நானும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். பீகார் அமைச்சர்களும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்வர்.

"அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, சுஷ்மா சுவராஜை அறிவிக்க வேண்டும்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நான் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். இது தொடர்பாக, தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும்போது, எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம். நிலக்கரி சுரங்க ஊழலில், மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுபோத்காந்த் சகாய், காங்கிரஸ் எம்.பி.,க்கள், நவீன் ஜிண்டால், விஜய் தர்தா ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. எனவே, அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர்புடைய, மற்ற அரசியல் கட்சியினர் மீதும், சம்பந்தப்பட்ட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.

கருத்துகள் இல்லை: