புதன், 12 செப்டம்பர், 2012

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அமைச்சரின் காரை நிறுத்திய எஸ்ஐ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் முகமது ஷபி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.

கருத்துகள் இல்லை: