செவ்வாய், 11 செப்டம்பர், 2012

அழகிரி மகனின் olympus நிறுவனத்துக்கு சீல்!

மதுரை பஸ் ஸ்டான்டில் துப்பறியும் போலீஸ்!!

Viruvirupu
மதுரை கிரானைட் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு, ‘போல்ட்’டான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை ரத்து செய்துள்ளது.
கிரானைட் விவகாரத்தில் விசாரணைகள், தேடல்கள் என்று மதுரை ஏரியாவே பரபரப்பாக இருக்க, இதுவரை போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளாத சில கிரானைட் நிறுவன அதிபர்கள், கிரானைட் கிங் பி.ஆர்.பி.-யின் மகன்கள் உள்பட தொடர்ந்து தலைமறைவாக உள்ள 15 பேரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் ஒருவர்.
துரை தயாநிதியின் ‘தலைமறைவு’ தொடர்பாக எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அது தொடர்பாக விறுவிறுப்பில் ஏற்கனவே எழுதியிருந்தோம்
துரை தயாநிதி நடத்திய கிரானைட் நிறுவனம், ஒலிம்பஸ். இதில் அழகிரி மகனுடன் பங்குதாரராக இருந்தவர், மற்றொரு தி.மு.க. பிரமுகர் சூடம் மணியின் மகன் நாகராஜன்.

கீழவளவை அடுத்த அம்மன் கோவில்பட்டி பகுதியில் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஒலிம்பஸ் குவாரி, கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ‘சர்க்கரை பீர் மலை’ என்னும் பொக்கிஷ மலைப் பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி, அரசு கனிம நிறுவனத்திற்கு கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டது.
தற்போது விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, துரை தயாநிதி நடத்திய நிறுவனம் சட்டவிரோதமாக பல கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்றுள்ளது. அத்துடன், கிரானைட் குவாரிகளில் சட்டவிரோத வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, பாறைகளை வெட்டி எடுத்துள்ளது துரை தயாநிதியின்  நிறுவனம்.
இந் நிலையில்தான், துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தி.மு.க. பிரமுகர் சண்முகம், அ.தி.மு.க. பிரமுகர் கனகு, என கட்சி பேதமின்றி கைது செய்ததுடன், நிறுவன மேலாளர் பாலசுப்பிரமணியனையும் கைது செய்துள்ளனர்.
மதுரை போலீஸின் மட்டுப்படுத்தப்பட்ட திறமை காரணமாக, துரை தயாநிதி தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளார்.
அவராக விரும்பி தரிசனம் கொடுக்கும்வரை, சிறப்பு போலீஸின் ‘அதி சிறப்பு படைகள்’, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில், மேலூர் செல்லும் பஸ்களில் அதிரடி சோதனைகள் நடத்தி பணி புரிவார்கள்

கருத்துகள் இல்லை: