செவ்வாய், 11 செப்டம்பர், 2012

டக்ளஸ் தேவானந்தா: “மத்திய அரசு கொடுத்த துப்பாக்கியே என்னிடம் இருந்தது”

Viruvirupu



“சென்னையில் 1986-ம் ஆண்டு கலகம் விளைவித்ததாகவும், ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், நாம் வைத்திருந்த அந்த ஆயுதங்கள் எம்மிடம் எப்படி வந்தன? எங்களுக்கு இந்திய மத்திய அரசுதான் வழங்கியிருந்தது” என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அவரை சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சில் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்படுவது போல, என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய சட்டப் பிரிவில் ஈபிகோ 148-ம் பிரிவின் கீழேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

கொலைக் குற்றம் என்பது ஈபிகோ 302-ம் பிரிவு.
ஆயுதம் வைத்திருந்ததாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு வழங்கியதே மத்திய அரசுதான். எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது மத்திய அரசுதான்.
ஈழப் போராட்டம் தொடங்கிய நாட்களில், எங்களிடம் ஆயுத பலம் இருக்கவில்லை. அப்போது எங்களுக்கு ஆயுதங்களை வழங்கி, ஆயுதங்களை உபயோகிக்கும்படி எம்மை ஊக்குவித்தது மத்திய அரசுதான்.
இந்த சூளைமேடு விவகாரம் தொடர்பாக பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் தெரியுமா? “துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனை வாகனத்தில் கொண்டு செல்லும்போது, டக்ளஸ் தேவானந்தா அந்த இடத்திற்கு வந்தார்” என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், என்னை கொலைகாரனாக சித்திரிப்பது எவ்வகையில் நியாயமானது?

நான் அறிந்தவரை, அன்று சூளைமேடு பகுதியில் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள், இன்று இங்கு அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு என்மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இவரை கொல்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்தனர். ஈழ போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் லெபனானில் ராணுவ பயிற்சி பெற்ற டக்ளஸ் தேவானந்தாவை, புலிகளால் இறுதிவரை கொல்ல முடிந்திருக்கவில்லை.
2009-ம் ஆண்டுவரை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடிய இவர், தற்போது இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில், பிரசாரம் செய்வதற்காக சைக்கிளில்கூட வெளியே செல்கிறார்.

கருத்துகள் இல்லை: