செவ்வாய், 15 மே, 2012

கேரளாவால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து: தமிழக என்ஜினியர்கள் எச்சரிக்கை

சென்னை:  முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய போடப்பட்ட 8 துளைகளை உடனடியாக மூடவில்லை என்றால் அணைக்கு ஆபத்து என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்கள் ஆர்.வி.எஸ். விஜயகுமார், நடராஜன், சட்ட ஆலோசகர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் வீரப்பன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் அணை கட்டுமான தாங்கு திறனுடையதாகவும், நீரழுத்தத்தையும், நில நடுக்கத்தையும் தாங்கும் வகையில் வலுவாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கும உயர்ததலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

மேலும் அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடிக்கு உயர்த்த மற்றொரு வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும். இந்திய அரசின் திட்டக்குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் கேரளா தனது சொந்த செலவில் ஒரு புதிய அணையைக் கட்டிக்கொள்ளலாம். அதுவரை 1886 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணையின் அனைத்து உரிமைகளும் தமிழக அரசுக்கு உண்டு. புதிய அணை இயக்கம் மற்றும் பராமரிப்பிற்கான புதிய ஒப்பந்தத்தை இருமாநிலங்களும் செய்து கொள்ளவேண்டும். இதற்காக இரண்டு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஆபத்து காலத்தில் நீரை வெளியேற்ற சுரங்க மதகு புதிதாக கட்ட வேண்டும் ஆகிய ஆலோசனைகளை அந்த குழு அளித்துள்ளது. இந்த ஆலோசனைகளை அந்த குழு வழங்கியிருக்கத் தேவையில்லை. இந்த ஆலோசனைகள் கேரள அரசுக்கு சாதகமாக உள்ளன.

அணையின் தற்போதைய நீர்த்தேக்க அளவான 136 அடிக்கு மேல் உள்ள சுமார் 3,600 ஏக்கர் பரப்பளவில் முறையான அனுமதி பெறாமல் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டி அந்த இடம் சுற்றுலாத்தலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால் கேரள சுற்றுலாத்துறைக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் இந்த கட்டிடங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது.

அணையின் வலுவை சோதிக்க ஐவர் குழு அணையில் 130 முதல் 190 அடி வரையான ஆழத்தில் மொத்தம் 8 துளைகள் போட்டு மண் மாதிரி சேகரித்தது. அந்த துளைகள் இன்றைக்கு வரை மூடப்படாமல் உள்ளன. அடுத்த மாதம் பருவ மழை காலம் துவங்கவிருக்கிறது. அதற்குள் துளைகளை அடைத்தாக வேண்டும். இல்லையெனில் மழை நீர் புகுந்து அணை பலவீனமாகக்கூடும். அந்த துளைகளை கான்கிரீட் கொண்டு அடைக்க தமிழக பொறியாளர்கள் முயன்று வருவதை கேரள போலீசார் தடுக்கின்றனர். இது குறித்து ஆய்வுக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

1961ம் ஆண்டு அணையின் பாதுகாப்பு பணியி்ல் இருந்து தமிழக போலீசார் விலகி கேரள போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு தான் ஊதியம் வழங்கி வருகிறது. எனவே, அணையின் பாதுகாப்புக்கு தமிழக போலீசாரை நியமித்து அவர்கள் துணையுடன் துளைகளை அடைக்க வேண்டும். துளைகளை அடைக்காவிடில் கேரளத்தால் அணைக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சட்டப்படியும் சரி, ஒப்பந்தப்படியும் சரி முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் சொத்து. அதன் மீதான முழு உரிமை தமிழக அரசுக்கு தான் உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதிபடுத்தியுள்ளது. மேலும் ஐவர் குழுவும் தனது அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளது.

எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் தமிழக போலீசாரை நிறுத்தி நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை: