வியாழன், 17 மே, 2012

வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

வாடகைதாரர் விவரம்சென்னை மாநகரப் போலீசு நடத்திய போலி மோதல் கொலைகளும், வடமாநிலத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. சென்னையில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் குடியிருக்கும் ‘சமூக விரோதி’களால் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் குடியமர்த்திருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை அருகாமை போலீசு நிலையத்தில் தரவேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது இ.பீ.கோ பிரிவு 188இன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசு உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ், மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, போலீசு தருகின்ற படிவத்தில், ‘வாடகைதாரரின் புகைப்படம், அடையாள அட்டை, அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கெனவே குடியிருந்த முகவரி, செல்பேசி எண், வேலை செய்யும் இடத்தின் முகவரி, வீட்டில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம்’ ஆகியவற்றைத் தரவேண்டும்.  வீட்டு உரிமையாளர் அதற்கு கைச்சான்றும் அளிக்க வேண்டும்.

ஜெயா அரசின் அப்பட்டமான இந்த பாசிச நடவடிக்கையை ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் கண்டிக்கவில்லை. சில மனித உரிமை அமைப்புகளும் வழக்குரைஞர்களும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். வலுவான எதிர்ப்பேதும் இல்லாததால், உள்ளூர் ஓட்டுப்பொறுக்கித் தலைவர்கள் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போலீசு. வீட்டு உரிமையாளர்களின் பார்வையில், வாடகைதாரர்கள் சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) இவ்வுத்தரவுக்கு எதிராக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றையும் தாக்கல் செய்தது. போலீசின் உத்தரவு வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதுடன், அவர்களது தனிமைச் சுதந்திரத்தை மறுப்பதாகவும், சொந்த வீடு இல்லாதவர்களையும் வெளிமாநிலத்தவரையும் கிரிமினல்களாகச் சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை ஆள்காட்டிகளாக மாற்றுவதாகவும் வாதிட்ட ம.உ.பா.மையம், இந்த உத்தரவுக்கு உடனே  தடை விதிக்கக் கோரியது. வீட்டு உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் 30.3.2012 அன்று தடை விதித்த உயர் நீதிமன்றம் 25.4.2012 அன்று மொத்த உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. போலீசின் இவ்வுத்தரவு  தடுக்கப்படாமலிருந்தால், தமிழகம் முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்பட்டிருக்கும்.
பயங்கரவாத தடுப்பு, கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்து வருகின்றன, மத்தியமாநில அரசுகள். மக்கள் மீதான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதால், குடிமக்கள் அனைவரையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகவே அரசும் ஆளும் வர்க்கமும் கருதுகின்றன. மத்தியமாநில உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், ஆதார் அட்டை, வீதிகளில் ஆங்காங்கே நிறுவப்படும் டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர் போன்றோரின் தரவுகள் திரட்டப்படுதல் போன்றவற்றின் வரிசையில் வருகிறது, சென்னை போலீசின் இவ்வுத்தரவு.
பாசிசம் வெகுவேகமாக நிறுவனப்படுத்தப்படுகிறது. சுருக்கு இறுகுமுன்னர் விழித்துக்கொண்டு அதனை அறுத்தெறிந்தாகவேண்டும்.

கருத்துகள் இல்லை: