Viruvirupu,
முதல்வரின்,
மறுபிறவி தோழி சசிகலா கணவர் நடராஜன் பெயிலில் வெளியே விடப்பட்டதற்கு
அ.தி.மு.க. சாக்கிள்களில் கூறப்படும் காரணங்களில், நடராஜன் குடும்பத்தில்
சுப காரியங்கள் நடைபெறவுள்ளன என்பதும் ஒன்று. நடராஜன் குடும்பத்தினரால்
எழுதப்பட்ட உருக்கமான கடிதம் ஒன்று கார்டனுக்கு சென்றதை அடுத்தே, நடராஜன்
ஜாமீனுக்கு கிரீன் சிக்னல் காட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.ஆனால் வெளியே வந்த நடராஜன், கொஞ்சம் வில்லங்கமாக பேட்டி கொடுத்ததில், இந்த ஜாமீன் விவகாரத்தில் மேலிடத்தில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
“சுப காரியம் நடப்பதாக நீங்கள் கேட்டுக் கொண்டதால் அவரை வெளியே விட்டது தப்பாக போய்விட்டது என்று மேலிடத்தை நினைக்க வைத்து விடாதீர்கள். சுப காரியம் முடியும் வரையாவது நடராஜனை வாயை மூடிக்கொண்டிருக்க சொல்லுங்கள்” என்று தோழியின் அவசர மெசேஜ் ஒன்று போக வேண்டிய இடத்துக்கு போயிருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் ‘சுப காரியம்’ என்று குறிப்பிடுவது, ஒன்றல்ல, இரண்டு! இரண்டுமே திருமணங்கள். இன்னும் 10 நாட்களில் நடைபெறவுள்ளன.
மே 23-ம் தேதி நடராஜன் தம்பி ராமச்சந்திரனின் மகன் திருமணமும், மே 25-ம் தேதி நடராஜனின் தங்கை மகள் திருமணமும், நடைபெறவுள்ளன. இரண்டு திருமணங்களுமே தஞ்சையில் நடராஜனுக்குச் சொந்தமான தமிழரசி திருமண மண்டபத்திலேயே நடைபெறவுள்ளன. இவற்றில் நடராஜன் கலந்து கொள்ள வேண்டும் என்பதே, மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உருக்கமான கோரிக்கை.
சிறையில் வைக்கப்பட்டிருந்த சசி சின்டிகேட் ஆட்கள் திவாகரன், ராவணன், நடராஜன் என வரிசையாக வெளியே விடப்பட்டதால், மேலிடத்தின் கருணைப் பார்வை தம்மீது படத் துவங்கிவிட்ட ஆனந்தத்தில், இந்த திருமணங்களில் சசிகலா கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நடராஜன் குடும்பத்தினருக்கு இருந்தது. என்ன இருந்தாலும், அந்த சுற்றுவட்டாரத்தையே உச்சத்தில் ஏற்றி விட்ட ஒற்றை நபரல்லவா சசிகலா!
ஆனால், நடராஜனின் திருச்சி பேட்டியுடன் (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) சசிகலா விஜயம் குழப்பத்தில் இருக்கிறது.
சசிகலா-நடராஜன் குடும்பங்களின் அனைத்து சுப காரிய அழைப்பிதழ்களின் டைட்டிலிலும் தவறாமல் இடம்பெறும் ட்ரேட்மார்க், “புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடு” என்ற வாசகம் இந்த இரு திருமண அழைப்பிதழ்களிலும் ஆரம்பத்தில் மிஸ்ஸிங்.
திருமண அழைப்பிதழ் தயாரான போது, நடராஜன் ‘உள்ளே’ இருந்தார். அழைப்பிதழ் தயாராகி, சில உறவினர்களுக்கு அழைப்பு வைக்கப்பட்ட நிலையில், நடராஜன் வெளியே விடப்பட்டார். அதையடுத்து, “புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடு” ட்ரேட் மார்க்குடன் மற்றொரு அழைப்பிதழ் பிரின்ட் பண்ணுவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
வழமைபோல தஞ்சை அல்லது சென்னையில் பிரின்ட் பண்ணாமல், புதிய அழைப்பிதழ் ஹைதராபாத்தில் பிரின்டாகி, வந்திருக்கிறது.
பழைய அழைப்பிதழை நிறுத்திவிட்டு, புதிய அழைப்பிதழ் சில உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில், சசிகலா கலந்து கொள்வார் என ஒரு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
நடராஜனின் திருச்சி கே.கே.நகர் செய்தியாளர் சந்திப்பு ஏற்படுத்திய குழப்ப அலைகள் கார்டனை சென்றடைந்து, அங்கிருந்து புகை கிளம்புவது கண்ணுக்கு தெரிவதால், இந்த புதிய அழைப்பிதழ் கொடுக்கப்படுவது, நேற்று திடீரென நின்றுவிட்டது. நேற்றிரவு மீண்டும் பழைய அழைப்பிதழ் வலம்வர துவங்கியுள்ளது.
தஞ்சை திருமணங்களுக்கு சசிகலா வருவாரா, மாட்டாரா என்பதை, அழைப்பிதழ்களை வைத்து ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மாநில அரசின் செயல்பாடுகள் இனி எப்படி அமையப் போகின்றன என்பதை ஊகிப்பதற்கு, யாரோ ஒருவரின் திருமண அழைப்பிதழை பார்க்க வேண்டிய நிலையில் இருப்பது, தமிழினத்தின் பேரதிஷ்டம்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக