வியாழன், 17 மே, 2012

ராமஜெயம் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்: உண்மையை மறைத்த குடும்பத்தினர்!

 Ex Minister S Family Misled Us Murder Probe Tn Cops
சென்னை: திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரே போலீசாருக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றனர்.
இந்நிலையில் ராமஜெயம் குடும்பத்தினர் கொடுத்த தகவல்கள் பொய்யானவை என்று தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமஜெயத்தின் மனைவி கைப்பட எழுதிக் கொடுத்த புகாரில் ராமஜெயம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நேரமான 9 மணி வரை அதாவது 5.20 மணி முதல் 9 மணி வரை தில்லை நகர் பகுதியில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் வரையில் என்ன நடந்தது என அலசி ஆராய்ந்துவிட்டோம். ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இறந்து 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் தான் விசாரணையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதாவது ராமஜெயம் 29ம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

எனவே அவர் முதல் நாள் இரவே கடத்தப்பட்டுள்ளார். ஆனால் ராமஜெயத்தின் குடும்பத்தினர் அவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வாக்கிங் சென்றதாக புகாரில் கூறியிருந்தனர். அவரது குடும்பத்தினர் பொய்யான தகவல்களைத் தந்துள்ளனர் என்றார் அவர்.

இதையடுத்து ராமஜெயத்தின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ராமஜெயத்தின் மனைவி ஏன் அப்படி தவறான தகவலைத் தர வேண்டும்? அப்படியானால் அதிகாலை 2.30 மணிக்கு ராமஜெயம் எங்கிருந்தார்? என்று அடுத்தடுத்த சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

போலீசாரின் தீவிர விசாரணையில் ராமஜெயம் 28ம் தேதி இரவு 10 மணிக்கே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. அவர் நடந்தே சென்றாக காவலாளியும் கூறியுள்ளார். எனவே ராமஜெயம் தனக்குத் தெரிந்தவரின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

மேலும் ராமஜெயம் காரில் கடத்தியோ, கூலிப்படை மூலமோ கொலை செய்யப்படவில்லை. திருச்சியில் ஏதோ ஒரு வீட்டில் வைத்துத் தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ் வட்டாரம்.

இதனிடையே இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செவிலியர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயத்தால் வேலையில் சேர்த்து விடப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணிடம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.

மேலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: