செவ்வாய், 15 மே, 2012

சுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து

நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் வியாழன், வெள்ளி அன்று வீழ்ந்த சந்தைக் குறியீட்டு எண்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் முக்கியக் காரணம், இந்தியாவின் தொழில் உற்பத்தி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்திருப்பதே.
வளரும் நாடான இந்தியாவில் இதுபோன்ற உற்பத்திக் குறைவு இருக்கவே கூடாது. பின் எதனால் இப்படி ஏற்பட்டது?
தொழில்துறை முதலாளிகள் ஏன் உற்பத்தி செய்கிறார்கள்? தாம் உற்பத்தி செய்த பொருள்களைப் பிறரிடம் விற்று லாபம் சம்பாதிக்க. லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் அவர்கள் உற்பத்தியைக் குறைத்துவிடுவார்கள். அல்லது தாற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள். அதேபோல டிமாண்ட் இல்லை என்றாலும் அவர்கள் உற்பத்தியைக் குறைப்பார்கள். வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் பொருள்களை உற்பத்தி செய்து என்ன பயன்?
சென்ற ஆண்டு இந்தியாவில் உற்பத்தி குறைந்ததற்குக் காரணம் என்ன?
உலக நாடுகளில் தேக்க நிலை அதிகரித்தது ஒரு காரணம் என்பார் பிரணாப் முகர்ஜி. அது அவ்வளவு முக்கியக் காரணம் இல்லை. அதைவிட முக்கியமான காரணம், உள்நாட்டில் பொருள்களை விற்பதால் கிடைக்கும் லாபம் மிகக் குறைவு என்பதுதான். இந்திய உற்பத்தியில் பெருமளவு, இந்தியாவிலேயேதான் விற்பனை ஆகி, நுகரப்படுகிறது. ஏற்றுமதி குறைவுதான். சீனாவிலோ, உள்நாட்டு நுகர்வுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி மிக அதிகம். அதனால் global recession காரணமாக இந்தியாவைவிட சீனாதான் அதிகம் பாதிக்கப்படும்.

உள்நாட்டில் நுகவு குறையக் காரணம் என்ன?

கடந்த இரு ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வந்தது. அனைத்துத் தொழில் நிறுவனங்களுமே கடனை நம்பித்தான் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. கடனுக்கான வட்டி அதிகமாக ஆக, லாபம் குறைகிறது; அல்லது அறவே இல்லாமல் போய்விடுகிறது. மேலும், சில துறைகளில் நுகர்வோர் கடன் இருந்தால்தான் விற்பனையே நடக்கும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையில் கடன் பெரும் பங்கு வகிக்கிறது. கடனுக்கான வட்டி அதிகரித்தால் பொருள்களை வாங்குவோர் நான்கு முறை யோசித்துவிட்டு, குறைந்த விலை கொண்ட பொருள்களை வாங்குகிறார்கள் அல்லது வாங்காமலேயே போய்விடுகிறார்கள். கடனில் வீடு வாங்கியிருப்போரும் இந்தச் சுமையை வெகுவாக உணர்ந்திருப்பர்.

ஆனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை ஏன் அதிகரித்தபடியே இருந்தது? அதற்குத் தெரியாதா இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி இதனால் பாதிக்கப்படும் என்று?

நன்றாகத் தெரியும். ஆனால் ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கம், எப்படியாவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே. வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினால், பணப்புழக்கம் குறையும். அதிக வட்டி கிடைக்கிறதே என்று பணத்தைச் செலவழிக்காமல் வங்கியில் போட்டுவைக்கப் பலர் முனைவார்கள். தொழில் நிறுவனங்களும்கூட தங்களிடம் இருக்கும் ரிசர்வ் பணத்தை மேலும் மேலும் தொழிலில் முதலீடு செய்யாமல் அப்படியே ரொக்கமாகவே வைத்து அதிக வட்டியைச் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்தால் தொழிலில் முதலீடு செய்வதைவிட அதிக லாபம் கிடைக்கலாம். இப்போது இந்தியாவின் பெரு நிறுவனங்கள் அனைத்தையும் பாருங்கள். அவர்களின் கையிருப்பு ரொக்கம் கடந்த இரு ஆண்டுகளில் மிக அதிகமாக ஆகியிருப்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.

மாறாக, கடனுக்கான வட்டி குறைந்தால், பணத்தைக் கடனாக வாங்கிச் செலவழிக்கப் பலர் நினைப்பார்கள். அப்போதுதான் டிமாண்ட் அதிகமாகும், விற்பனை அதிகமாகும், தொழில் துறை அதிக உற்பத்தியைச் செய்யும். அவர்களுக்குக் கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறைவாக இருக்கும், எனவே தொழில்துறை லாபம் அதிகரிக்கும். தொழில்துறை லாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும்.

அப்படியானால் வட்டி விகிதத்தைக் குறைவாக வைத்து தொழில்துறையை வளரச் செய்வதுதானே நல்லது? பணவீக்கம் கொஞ்சம் அதிகமாகப் போனால் என்ன குறை என்கிறீர்களா? வளரும் ஒரு நாட்டுக்கு ஓரளவுக்குப் பணவீக்கம் இருக்கலாம். மிக அதிகமாக ஆனாலும் பிரச்னைதான். முக்கியமாக ஏழைகளைப் பெருமளவிலும் நடுத்தர வர்க்கத்தை ஓரளவும் பணவீக்கம் பாதிக்கும். எனவே அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். கையை மீறிப் போய்விட்டால் hyper-inflation என்ற பிரச்னை வரும். ரிசர்வ் வங்கி பெரும் எண்ணிக்கையில் புதுப் பணத்தை அச்சிடவேண்டும். குறைந்த மதிப்பு நோட்டுகளை நீக்கவேண்டும்.

பணவீக்கம் பல காரணங்களால் அதிகரிக்கிறது. பணப்புழக்கம் அதிகரிப்பதால் மட்டுமல்ல. உற்பத்தி குறைவால். பெட்ரோல் விலை அதிகரிப்பதால். அரசின் செயல்திறன் குறைவாக இருப்பதால். அரசு நிறையப் பணத்தை மானியம் என்ற பெயரில் நிறைய மக்களுக்குக் கொடுத்தால்.

பணவீக்கம் என்பதை விலையேற்றம் என்று வைத்துப் பாருங்கள். சென்ற ஆண்டு ஒரு ரூபாய் விற்ற ஒரு வாழைப்பழம், இந்த ஆண்டு ரூ. 1.25 ஆகிறது என்றால் பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. எதனால் எல்லாம் இப்படி ஆகலாம்? சென்ற ஆண்டு விளைந்த வாழைப்பழங்களைவிட இந்த ஆண்டு குறைந்த அளவே வாழைப்பழங்கள் விளைந்துள்ளன என்றால் சந்தையில் விலை ஏறும். இந்தியாவில் விவசாயப் பொருள் உற்பத்தி, அதன் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பதில்லை. இதைத் தனியாக விவாதிக்கவேண்டும். இங்கு இடமில்லை.

அடுத்து, எல்லாப் பொருள்களுமே ஓரிடத்தில் விளைவிக்கப்பட்டு இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உற்பத்திச் செலவு அதிகம் ஆகாவிட்டாலும்கூட போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும்போது பொருளின் அடக்க விலையை அதிகரிக்கவேண்டியுள்ளது. பெட்ரோல் விலை அதிகரிக்கக் காரணம், சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதுதான்; உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமே சம்பாதிக்கின்றன என்று நம் அரசு கூசாமல் பொய் சொல்லும். உண்மையில் இந்தக் கச்சா எண்ணெய் விலையை எடுத்துக்கொண்டாலும் அரசின் அதீத வரிகள்தாம் நம் கைக்குக் கிடைக்கும் பெட்ரோல் விலையை அதிகரிக்கின்றன. ஆனால் எந்த அரசுமே (மத்திய + மாநில) அந்த வரிகளைக் குறைக்க விரும்புவதில்லை.

வரிகளைக் குறைப்பதால் வருமானம் குறையும் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் பல இடங்களில் வரிகளைக் குறைப்பதன்மூலம் வருமானத்தை வெகுவாக அதிகரிக்க முடியும். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று compliance அதிகரிக்கும். இரண்டு, பயன்பாடு அதிகரிக்கும். மூன்றாவதாக, அரசே செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கும் சில மானியங்களை வெட்டலாம். வீடு, நிலம் வாங்கி விற்கும்போது செலுத்தப்படும் ஸ்டாம்ப் டியூட்டி சதவிகிதத்தைக் குறைக்கும்போதெல்லாம் அரசுக்குக் கிடைக்கும் வரி அளவு அதிகரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம், இந்த விகிதம் குறையும்போது கருப்புப் பணம் குறைகிறது. கச்சா எண்ணெய் மீதான வரி விகிதத்தைக் குறைப்பதால் சில மாதங்களுக்கு அரசின் வரி வருமானம் குறைந்தாலும் வெகு விரைவிலேயே பயன்பாடு அதிகமாவதாலும் பொருளாதாரம் வளர்வதாலும் மொத்த அரசு வருமானம் உயரத்தான் செய்யும்.

அடுத்து, வரிகளைக் கூட்டி, பின் டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு மானியங்களைக் கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலும் ஒரு லிட்டர் டீசலும் கிட்டத்தட்ட ஒரே காசுதான் இருக்கவேண்டும். ஆனாலு இந்தியாவில் இரண்டுக்கும் இடையேயான விலை வித்தியாசம் சுமார் 30-40% இருக்கும். ஏனெனில் விவசாயத் துறை டீசலைப் பயன்படுத்துகிறது என்றும் அவர்களுக்கு நல்லது செய்வதற்காக விலை குறைவாக வைக்கிறோம் என்றும் சொல்வார்கள். அதேபோல வரிகளை ஏற்றிவிட்டு, பிறகு வீடுகளுக்குத் தரப்படும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க அரசு மானியம் தருவதாகச் சொல்வார்கள். வரிகளைக் குறைத்து, மானியத்தை அறவே நீக்கிவிடலாம். விவசாய டீசலுக்குக் குறைந்த விலை தேவை என்பதற்காக நாட்டில் ஜென்செட் வைத்திருப்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் என்று அனைவருக்கும் மானியம் தரவேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனில் இருப்பதுபோல கலர் டீசல் முறையைக் கொண்டுவரலாம். அல்லது விவசாயிகளுக்கு நேரடி மானியமாக, பணமாகத் தந்துவிடலாம்.

அடுத்து, பயனற்ற கொள்கை முடிவுகளால் ஏழை மக்களிடம் போய்ச் சேரும் பணம், பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. உதாரணம்: மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம். ஊழல் தலைவிரித்தாடும் இந்தத் திட்டத்தில் இங்கு மண்ணை வெட்டி அங்கு மண்ணைக் கொட்டினால் பணம். பிறகு அதே மண் அங்கிருந்து வெட்டி இங்கே கொட்டப்படும். பல இடங்களில் இந்தச் செயலைக் கூடச் செய்யவேண்டாம். திட்ட மேற்பார்வையாளருக்கு வெட்டவேண்டியதை வெட்டினால், கைக்குப் பணம் கிடைத்துவிடும். இந்த மாபெரும் அரசு மோசடியால் மிகக் குறைவான அளவுக்கே உருப்படியான கட்டுமானங்கள் உருவாகியுள்ளன. ஏனெனில் திட்டத்தின் அடிப்படையே தவறு. இந்தத் திட்டத்தில் உடல் உழைப்பு மட்டும்தான் இருக்கலாம். இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படலாகாது.

நாம் இன்னும் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதற்கு இதுவே முக்கியமான சான்று. இன்று எந்த உருப்படியான கட்டுமானத்தையும் இயந்திரங்கள் இல்லாமல் செய்ய முடியாது. விவசாயம் உட்பட. ஆனால் நாம் இன்னும், ஏழை மக்கள் உடலை வருத்தி வெயிலில் நிற்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களுக்கு தினப்படி 100 ரூபாய் தருவோம் என்றும் சொல்கிறோம். இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குச் சொல்லித்தர மாட்டோம். அவர்கள் நாள் முழுதும் நேரத்தை வீணடித்து ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு நூறு ரூபாய். அதுவும் நூறு நாட்களுக்கு மட்டுமே.

கல்வியில் மானியம், சுகாதாரத்துக்கு மானியம் என்றால் அதில் பொருள் இருக்கிறது. உணவுப் பொருள்களை விலை குறைத்துத் தருவதில்கூடப் பொருள் இருக்கிறது. ஆனால் இப்படி பணத்தைச் சும்மா தூக்கித் தருவதில் இருக்கும் பிரச்னையை அரசு புரிந்துகொள்ளவில்லை. இது மக்களிடையே உழைக்கும் எண்ணத்தையே தருவதில்லை. கைக்கு எளிதில் (உழைக்காமல்) பணம் வருவது, தண்டச் செலவினங்களையே அதிகரிக்கும். இதுவும் தேவையற்ற பணவீக்கத்துக்கு ஒரு காரணம். UPA அரசின் MGNREGA திட்டம் நிச்சயமாக பணவீக்கத்துக்கு ஒரு காரணம். விவசாய உற்பத்தியைப் பாதிப்பதற்கும் இது ஒரு காரணம். விவசாயக் கூலிகள் கிடைக்காத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காலாகாலமாக ஏழைகள் விவசாயக் கூலிகளாகவே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருக்கும் ஒரு சமநிலையை 100 நாள் வேலைத் திட்டம் குலைத்துவிட்டது. விவசாயிகளை அரசு முன்கூட்டியே தயார்ப்படுத்தவில்லை. விவசாயிகள் இடையே structural மாற்றம் தேவை. இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும் பெரிய நிலங்கள் தேவை. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் சின்னச் சின்ன நிலமெல்லாம் இனிச் செல்லுபடியாகாது. விவசாயக் கூலிகளை வைத்துக்கொண்டு விவசாயம் பார்ப்பது உருப்படாது என்று நினைக்கும் பலரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் லாபகரமாக ஈடுபடவேண்டும் என்றால் பல மாற்றங்கள் தேவை. அரசின் உதவி தேவை. தடையற்ற மின்சாரம், தேவையான அளவு நீர், உரங்கள் ஆகியன இல்லாமல் அதிக உற்பத்தி சாத்தியம் இல்லை. அதிக உற்பத்தி இல்லையென்றால், விலை ஏறத்தான் செய்யும். APMC சட்டங்களைப் பயன்படுத்தி, விவசாயப் பொருள்களின் விலையைக் கீழாகவே வைத்திருக்க வெகு காலத்துக்கு முடியாது.

அரசின் மறைமுக வரிக் கொள்கையும் பொருள்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம். ஆயத்தீர்வை (மத்திய அரசு), விற்பனை வரி (மாநில அரசு) ஆகியவை அதிகரிக்க அதிகரிக்க பணவீக்கம் அதிகமாகத்தான் செய்யும். வருமானம் இல்லாமல் தாங்கள் என்ன செய்வது என்று அரசுகள் கேட்கலாம். பொருளாதார வளர்ச்சியின்பால் வரும் வருமானத்தையே அரசுகள் நம்பியிருக்கவேண்டும். பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டுவரும் வருமானங்களை ஓர் அரசு விரும்பக்கூடாது. விற்பனை வரி அதிகரிப்பு போன்றவை அப்படிப்பட்ட கேடான வரிகளே. ஆயத்தீர்வை சதவிகிதத்தை அதிகரித்தால் வரும் வருமான அதிகரிப்பைவிட, மோட்டார் வாகனங்கள் இரு மடங்கு விற்பனை அதிகரிப்பதால் வரும் வருமான அதிகரிப்பு மிக அதிகம்.

ஆக இந்தச் செயல்களையெல்லாம் ஓர் அரசு செய்யாத காரணத்தால், பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின்மீது விழுந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறுகிய கால பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கும் மேலாக வட்டி விகிதத்தை அதிகரித்ததன் பயனை இன்று நாம் ஒருவித recession மூலமாகச் சந்திக்க உள்ளோம். நல்ல வேளையாக, சேவைத் துறை ஓரளவுக்கு நன்றாகச் செயல்படுவதால் நாடே ஒட்டுமொத்த recession-இல் போகவில்லை. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டில் பொருள் உற்பத்தித் துறை சரியாக இல்லையென்றால், ஏற்கெனவே விவசாயத் துறை தடுமாற்றத்தில் உள்ளது என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது சேவைத்துறையை மட்டும் வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது.

***

இப்போது நடந்துள்ள கடுமையான வீழ்ச்சிக்கு முழுக்காரணம் இப்போது ஆட்சி நடத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே. இந்தப் பழி அனைத்தும் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய நால்வரையே முக்கியமாகச் சாரும்.

மன்மோகன் சிங் செயலற்றவர் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பொருளாதாரச் செயல்பாடுகள்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அது இப்போது போய்விட்டது. முகர்ஜிக்கு நவீன பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். அப்போது ஒரு குரங்குகூட நிதியமைச்சராக இருந்திருக்க முடியும். சென்ற ஐ.மு.கூ அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர், சோனியாவிடம் நிதித் துறையைக் கேட்டுப் பெற்றார் என்கின்றன செய்திகள். ப.சிதம்பரமே மீண்டும் நிதியமைச்சராக ஆவார் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. ஆனால் யார் நிதியமைச்சராக இருந்திருந்தாலுமே, சோனியா காந்தியின் National Advisory Council முடிவு செய்யும் கேலிக்கூத்தான திட்டங்களுக்கு ஏதோ வகையில் பணம் சேகரித்துத் தருபவர்களாகவே இருக்கவேண்டிய நிலை. சோனியா காந்தியின் திட்டங்கள் எந்தவிதத்தில் நாட்டுக்கு உபயோகமானவை என்று யாரும் நாடாளுமன்றத்தில் விவாதித்ததாகவே தெரியவில்லை. அது MGNREGA ஆக இருக்கட்டும், RTE ஆக இருக்கட்டும், எங்கிருந்தோ முளைத்து, எங்கோ வரைவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டு, சட்டம் ஆகிவிடுகிறது.

அந்தச் சட்டத்தின் நிறைகுறைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விவாதம் செய்யத் தெரியாத மூடர்களாக இருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

அதனால் இந்த மோசமான நிலைமையை வந்து சேர்ந்திருக்கிறோம். பிற விஷயங்களைப் போல அல்ல பொருளாதாரத் திட்டங்கள். நாட்டின் வளர்ச்சியை, முன்னேற்றப் பாதையை எந்தக் காரணத்துக்காகவாவது விட்டுக்கொடுத்துவிட்டோம் என்றால் அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு மீண்டும் இருளில் மூழ்கிவிடுவோம். இப்போதுதான் சற்றே மீண்டுவந்துள்ளோம். நடுத்தர மக்களது வாழ்வு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வும் இதில் அடங்கியுள்ளது.
(படம்: தி ஹிந்து. தொடர்புள்ள கட்டுரை இங்கே)

எனவே உடனடி மாற்றம் தேவை. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸைத் தூக்கி எறிவதிலிருந்து நாம் ஆரம்பிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: