சனி, 19 மே, 2012

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

 அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.
பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம்.
வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: