வெள்ளி, 18 மே, 2012

ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ

கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.

இதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை?
இந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவது ஏன்? இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே?உலகின் நிலையான கரன்சிகள் என்றால் அவை டாலர், பவுண்ட், யூரோ, (ஒரு காலத்தில் யென்). ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பு உருவாவதற்குமுன், ஜெர்மனியின் மார்க் நாணயம் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்றியம் உருவானதும், அந்த இடத்தை யூரோ பிடித்துக்கொண்டது. இவற்றைத்தான் உலக நாடுகள் நாணய மாற்றாகப் பயன்படுத்துகின்றன. இதில் டாலர்தான் மிக முக்கியமான கரன்சி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்லவேண்டும் என்றால் நாம் டாலரை வாங்கிச் சென்று அங்கே இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்கிறோம். இப்படி பல நாடுகளுக்கு இணைப்பு கரன்சியாக இருப்பதால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி டாலர் வலுவாக உள்ளது. யூரோ வெகு விரைவாக முன்னேறி ஒரு கட்டத்தில் டாலரை விஞ்சி உலகின் முக்கியமான மாற்று கரன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்படிகளால் யூரோ கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிரேக்க நாடு போண்டியாகும் நிலையில் உள்ளது. அதனை ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவர்கள் கை தூக்கிவிட்டு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு விலையாக அந்நாடு தன் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கவேண்டும் என்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அந்நாட்டின் முந்தைய அரசு கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அங்கே தேர்தல் நடந்து தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் செலவுக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்காவிட்டால் கடன் கொடுப்பவர்கள் மேற்கொண்டு கொடுக்கமாட்டார்கள்.

இதனால் யூரோவின் மதிப்பு வீழ்கிறது. தொடன்ர்து ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை பூதாகாரமாக விரிந்துகொண்டிருக்கிறது. வரிசையாக இந்த நாடுகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கடன்களை வாங்கவேண்டிய நிலை வரப்போகிறது. இதெல்லாம் வரும் இரண்டாண்டுகளில் நிகழும். யூரோ மேலும் மேலும் விழப்போகிறது.

இதனால் கையில் யூரோ வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் அந்த நாணயத்தைக் குப்பையில் கொட்டிவிட்டு, மாற்றாக எதையோ வாங்கிவைக்க விரும்புகிறார்கள். அப்படி எதனை வாங்கி வைப்பது? டாலரையும் பவுண்டையும்தான்! ஆக, அவர்கள் விரும்பி ஒன்றும் இந்த நாணயங்களை ரிசர்வாக வைக்கவில்லை. யூரோவின் அழிவினால் தங்கள் சேமிப்பு போய்விடக்கூடாதே என்பதனால். அப்படியானால் டாலர், பவுண்ட் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகமாகும். அதனால் அவற்றின் மதிப்பு கூடும். எனவே இந்த இரண்டு கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு விழும். இதனை இப்போதைக்குத் தடுக்க முடியாது.

யூரோ யூனியன் பொருளாதாரக் குழப்பங்களால் உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலுமே கரடி மனோபாவமே உள்ளது. உள்ள பங்குகளையெல்லாம் விற்றுத் தள்ளிவிட்டு, பணமாக (அதையும் டாலர், பவுண்டாக) வைத்துக்கொள்ளலாம் என்று பெரும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்தால் இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம் ஏற்படும். (ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.) அந்நிய நிதி நிறுவனங்கள் தம் கையில் உள்ள இந்தியப் பங்குகளை டாலராக மாற்றும்போது அதனாலும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர்மீது கிராக்கி அதிகரிக்கிறது. டாலர் அதிகரிக்க, ரூபாய் விழுகிறது.

இந்த ஒரு விஷயத்தில் பிரணாப் முகர்ஜியை அல்லது இந்திய அரசை முதன்மை வில்லனாகச் சித்திரிக்க முடியாது. பிரணாப் சொல்வதுபோல விஷயம் மிகவும் சிக்கலானது. நாம் பதற்றம் அடையக்கூடாது. என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இந்தியா இருப்பதால் டாலர், யூரோ, பவுண்ட் போன்றவற்றின் ஆட்டங்கள் இந்திய ரூபாயைப் பாதித்து அதனால் இந்தியர்களை பாதிக்கும்.

இந்தப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஒரு மாற்று வழி உள்ளது. ஆழம் மே இதழில் நரேன் எழுதியுள்ள கட்டுரையில் BRICS நாடுகள் தமக்கென ஒரு வங்கியை ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கரன்சியில் தமக்கு இடையேயான வியாபாரத்தைச் செய்வது பற்றி வருகிறது. வளரும் நாடுகளுக்கு, டாலர், யூரோ, பவுண்ட் தவிர ஒரு மாற்றுக் கரன்சி தேவை. அது சீனாவின் ரென்மின்பியாகவோ ரஷ்யாவின் ரூபிளாகவோ இருப்பதில் தப்பில்லை.

கருத்துகள் இல்லை: