வியாழன், 17 மே, 2012

Karnataka BJP எடியூரப்பா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

பெங்களூரு: சுரங்க முறைகேட்டில் சிக்கிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மருமகன் மற்றும் மகன்கள் நடத்தும் கல்வி அறக்கட்டளை, மோசடி செய்த சுரங்க நிறுவனங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலத்தில், (2008 மே 30 முதல் 2011 ஜூலை 31 வரை) முறைகேடாக, ஜிந்தால் குரூப்பின் சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி, சுரங்க உரிமையாளர் பிரவீன் சந்திராவுக்கும், சுரங்கம் நடத்த அனுமதி வழங்கியதாகவும், இதற்காக, எடியூரப்பா மகன்கள் நடத்தும் பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு, 10 கோடி ரூபாயை ஜிந்தால் குரூப் நன்கொடையாக வழங்கியது மற்றும் எடியூரப்பா மகன்கள் நடத்தும் பஹத் ஹோம் லிமிடெட் நிறுவனத்துக்கு 2.5 கோடி ரூபாயும், தவளகிரி பிராப்பர்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 3.5 கோடி ரூபாயும், பிரவீன் சந்திரா வழங்கியதாகவும்,
கர்நாடக மாநிலம் தார்வாடை சேர்ந்த சமாஜ பரிவர்தனா சமுதாய அமைப்பின் ஹிரேமத் மற்றும் விஷ்ணு காமத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அறிக்கை தாக்கல்: இவ்வழக்கு குறித்து விசாரிக்க, மத்திய உயர் அதிகாரக் குழுவுக்கு (சி.இ.சி.,) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குழு விசாரணை நடத்தி, சுரங்க முறைகேடு விஷயத்தில் தவறு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால், எடியூரப்பாவிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், "எடியூரப்பா மீது, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. இதையடுத்து, எடியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் மற்றும் முறைகேட்டில் சிக்கிய சில நிறுவனங்கள் மீது, நேற்று முன்தினம் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. ஆனால், சி.பி.ஐ., அதிகாரிகள், எப்.ஐ.ஆர்.,-ஐ, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. ஆனாலும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட, 16 மணி நேரத்துக்குள்ளாக, அதாவது நேற்று அதிகாலையில் எடியூரப்பா, அவரது குடும்பத்தினர் வீடுகளில், பெங்களூரு, ஷிமோகா, பெல்லாரி ஆகிய இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையை துவக்கினர்.

ரெய்டு: நேற்று காலை 6 மணியளவில், ஐதராபாத்திலிருந்து வந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகளும், பெங்களூரு சி.பி.ஐ., அதிகாரிகளும் இணைந்து, பல குழுக்களாகப் பிரிந்து பெங்களூருவில், எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகா, பெல்லாரி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். சி.பி.ஐ., பெங்களூரு பிரிவு தலைவர் ஹிதேந்திரா தலைமையில், 16 அதிகாரிகள் கொண்ட குழு, நேற்று அதிகாலை 6 மணியளவில் முதலில், ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ள எடியூரப்பாவின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், சி.பி.ஐ., அதிகாரிகளை கொண்ட எட்டு குழுவினர், எடியூரப்பா, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

ஆவணங்கள் பறிமுதல்: ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ள எடியூரப்பாவின் வீட்டில் சோதனை நடத்திய நான்கு அதிகாரிகள், டாலர்ஸ் காலனியிலுள்ள, "தவளகிரி' வீட்டில் சோதனை நடத்தியதுடன், இந்த இரண்டு வீடுகளிலிருந்தும் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். எடியூரப்பா மகன்களுக்கு சொந்தமான பிரேரனா கல்வி அறக்கட்டளையின் அலுவலகம், தவளகிரி பிராப்பர்டீஸ் அலுவலகம், பஹத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடமிருந்தே பூட்டை திறக்க வைத்து, சோதனை நடத்தப்பட்டது. எடியூரப்பாவின் மருமகன் சோஹன் குமாருக்கு சொந்தமான ஆர்.பி.சி., லே அவுட்டிலுள்ள வீடு, பெல்லாரி மாவட்டம் தோரணகல்லில் உள்ள ஜிந்தால் மைனிங் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

வீட்டிலிருந்த எடியூரப்பா: சோதனையிடும் அதிகாரத்துடன் வந்த அதிகாரிகள், ஒட்டு மொத்த வீடு, அலுவலகங்களில் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது, எடியூரப்பா, ரேஸ் கோர்ஸ் ரோடு வீட்டில் இருந்தார். வீட்டிலிருந்து இரண்டு இன்னோவா வாகனங்களில் கோப்புகளை, சி.பி.ஐ., மத்திய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகளின் ஒரு குழுவினர், இந்த ஆதாரங்களை அலுவலகத்தில் பரிசீலித்து வருகின்றனர். சி.பி.ஐ., எஸ்.பி., சுப்பிரமண்யேஸ்வரா தலைமையிலான குழு, எடியூரப்பாவிடம் அவரது வீட்டில் வைத்தே விசாரணை நடத்தி வருகிறது. வீட்டின் எந்த உறுப்பினரையும் அதிகாரிகள் வெளியே விட வில்லை. தவிர, வெளியூரிலிருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. வீட்டு போன், மொபைல் தொடர்புகளும் ஒட்டு மொத்தமாக துண்டிக்கப்பட்டது. நேற்று பிற்பகலுக்கும் மேல் விசாரணை நீடித்தது. இதே வேளையில், வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்தும் தகவல்கள் பெற்று, எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களின் கணக்கு விவரங்களை பரிசீலித்தனர். பெங்களூருவிலுள்ள, பி.இ.எஸ்., கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சி: சி.பி.ஐ., அதிகாரிகளின் செயலால், எடியூரப்பாவின் குடும்பத்தினர், நெருங்கியவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். எடியூரப்பாவின் மீது விசுவாசமுள்ள தலைவர்கள், தொண்டர்கள் அடைந்த அதிர்ச்சியிலிருந்து, மீள்வதற்கு பல மணி நேரமானது. எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ள சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதும் சி.பி.ஐ., அதிகாரிகள், "நோட்ட'மிட்டு வருகின்றனர்.

ஜாமின் மனு இன்று விசாரணை: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முன்ஜாமின் மனு மீது, இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது. கர்நாடகாவில் எடியூரப்பா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கும் போதே, எடியூரப்பாவும், அவரது மகன்கள், மருமகன் ஆகியோர், பெங்களூரிலுள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த சி.பி.ஐ., நீதிமன்றம், சி.பி.ஐ., தரப்பில் விளக்கமளிக்குமாறு கேட்டனர். இதற்கு, சி.பி.ஐ., தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: