சனி, 29 அக்டோபர், 2011

வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்


Velayutham Movie
மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.
ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!
கதை?பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).
ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!
ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள். கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்... நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, 'அது நீங்கதான்' என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!

ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை... இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை 'முன்னே' பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!

தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!

விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!

இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!

கருத்துகள் இல்லை: