சனி, 29 அக்டோபர், 2011

தோற்கடிக்கப்பட்டவர்களின் பிரசாரமே போர்க் குற்றச்சாட்டுகள் : இலங்கை அரசாங்கம்!

போர்க்குற்றச்சாட்டுகள், வெறும் பிரசார நடவடிக்கைகள் என இலங்கை தெரிவித்துள்ளது. பொதுநலவாய உச்சிமாநாட்டின் அதிகளவு அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கையானது போர்க்குற்றச்சாட்டுகள் தோற்கடிக்கப்பட்டவர்களின் பிரசாரங்கள் என தெரிவித்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாயத்தின் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒன்றுகூட உள்ள நிலையில் இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவது நியாயமற்றது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.
புலிகளின் ஆதரவாளர்களினால் பிரசார இயந்திரம் சிறப்பான முறையில் செயற்படுத்தப்படுவதே இந்த விடயமாகும். ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஏ.பி.சி. செய்திக் கட்டமைப்புக்குக் கூறியுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் இந்த விடயம் குறித்து கதைத்திருந்தார்.
பொதுநலவாய உச்சிமாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் முன்னிடத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இது வெறும் குற்றச்சாட்டுகள் 30 வருட பயங்கரவாதத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்று ஜயசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, பேர்த்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கம் பயங்கரவாத அமைப்பை அழித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருளாதார சமூக அபிவிருத்திப் பாதையில் நாடு முன்னோக்கிச் செல்வதற்கு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
2013 இல் பொதுநலவாய உச்சிமாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதேவேளை, போர்க்குற்ற விவகாரத்திற்குத் தீர்வு காணப்படாமல் இலங்கையில் மாநாட்டை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக பொதுநலவாய நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலீல் ஷெட்டி விமர்சித்திருக்கிறார்.ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம், சட்ட ஆட்சி உட்பட அடிப்படை விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளும் உறுதிப்பாட்டை பொதுநலவாய நாடுகள் கொண்டுள்ளன என்று த வெஸ்ட் அவுஸ்திரேலியன் பத்திரிகையில் ஷெட்டி தனது அபிப்பிராயத்தை எழுதியுள்ளார்.
பொதுநலவாயத்தின் தலைமைத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ள இடமளிப்பது இந்தப் பெறுமானங்களுக்கு முரண்பாடானது எனவும் மனித உரிமைகள் தொடர்பான அமைப்பின் உறுதிப்பாட்டை தடம் புரளச் செய்வதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: