சனி, 29 அக்டோபர், 2011

தமிழக அரசு:ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் தாக்கல் செய்த மனுவில், 11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராக இருப்பதாகவும், எனவே வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் எம்.ரவீந்திரன் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.

3 கொலை கைதிகளின் மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த சம்பவத்தில் ராஜீவ் காந்தியுடன் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இங்குள்ள சிலருடன் சேர்ந்து நடத்திய கொடூர கொலை இது, என்பதுதான் அந்த சம்பவத்தின் வரலாறு.

மனுதாரர் மூன்று பேர் மற்றும் நளினி ஆகியோருக்கு தடா கோர்ட்டு விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 11.5.99 அன்று உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 பேரும் தமிழக கவர்னரிடம் கருணை கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கவர்னர் நிராகரித்தார்.

அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். கவர்னரின் உத்தரவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமைச்சரவையின் பரிந்துரைப்படி புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டது.

நளினிக்கு மட்டும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மற்ற 3 பேருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவை 20.4.2000 அன்று தீர்மானித்தது. அதன்படி கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து ஜனாதிபதியிடம் 3 பேரும் 26.4.2000 அன்று கருணை மனு கொடுத்தனர். அந்த மனுக்களை நிராகரித்து 12.8.11 அன்று ஜனாதிபதி உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தரவுப்படி 3 பேரையும் தூக்கில் போடுவதற்கு வேலூர் சிறை நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களின் கருணை மனு மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு சிறையில் மருத்துவம் உள்ளிட்ட நல்ல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

3 பேர் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தேவதாஸ், நன்மாறன், ராம.சிவசங்கர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வைகோ வாதாடுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கை நவம்பர் கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும். வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கும்பட்சத்தில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலமாக விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தடை நீட்டிப்பு என்ற கேள்விக்கே இடம் எழவில்லை. இந்த வழக்கில் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த உத்தரவு (வழக்கு விசாரணை முடியும் வரை) தொடர்ந்து நீடிக்கும்.

இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அடுத்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதனால் இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை: