சனி, 9 ஜூலை, 2011

கனரக ஆயுதங்களுடன் யுத்தத்தை நடத்துமாறு வலியுறுத்திய ஜே.வி.பி.யினர்

 இன்று பாதிக்கப்பட்டோர் குறித்து பேசுகின்றனர் : அமைச்சர் விமல் வீரவன்ச!

அன்று கனரக ஆயுதங்களைக் கொண்டாவது யுத்தத்தை நடத்துமாறு ஜனாதிபதியை வற்புறுத்திய ஜே.வி.பி.யினர் இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவரை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் பற்றி பேசுகின்றனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச வியாழக்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு நிலைவரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பினார்.அவர் அங்கு மேலும் பேசுகையில்;
“”யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவரை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், சேதமடைந்த வீடுகள் என அநுர குமார திசாநாயக்க புள்ளிவிபரங்கள் வாசிக்கிறார்.
எனினும், ஜனாதிபதி விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்தபோது ஏன் என்று தான் கேட்க, எதைக்கொண்டு தாக்குதல் நடத்துவதென ஜனாதிபதி கேட்க, எதைக்கொண்டாவது தாக்குதல் நடத்துங்கள் என்று தான் பதிலுக்குக் கூறியதாகவும் அன்று காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அன்று கனரக ஆயுதங்களைக் கொண்டாவது தாக்குதல் நடத்துங்கள் என்று ஜனாதிபதியை வற்புறுத்தியவர்கள்தான் இன்று யுத்தத்தினால் ஏற்பட்ட இந்த இழப்புகள் பற்றியும் பேசுகின்றனர். இவர்கள் இவற்றை எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை.
இதேநேரம், வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டங்களில் பெரும்பான்மையின மக்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதாக சம்பந்தன் எம்.பி. தெரிவிக்கிறார். இதுதான் துரதிர்ஷ்டம். உங்களுக்கு ஏன் இந்த மனநிலை?
அப்படியென்றால் புறக்கோட்டைப் பகுதியில் பெரும்பாலான வர்த்தக இடங்கள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. அப்படி நோக்கும்போது மேல் மாகாணம் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். அதில் எப்படி தமிழ் மக்கள் இடங்களை வாங்க முடியும் என்று நாம் எங்காவது வந்து கேட்கிறோமா?
நீங்கள் சொல்வதைப் போன்று பார்த்தால் வத்தளைப் பகுதியில் புதிதாக காணிகள், வீடுகள் வாங்கிய தமிழ் மக்களின் விபரப் பட்டியலை சேகரித்து வந்து வாசிக்க முடியும். ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. நீங்கள் பழைய மனநிலையில் இருக்கின்றீர்கள். அதில் மாற்றம் வரவேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மக்களும் இலங்கையின் எப்பகுதியிலும் வாழக்கூடியதாக இருக்கவேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: