சனி, 9 ஜூலை, 2011

1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள்: 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்: ஜெயலலிதா

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  இதன் முதற்கட்டமாக, நான் முதலமைச்சராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அதே
நேரத்தில் அரசால் வழங்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், வாழ்வில் வளம் பெற அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதும், அதற்கான பொருளாதார வளர்ச்சியை அவர்கள் பெற வேண்டும் என்பதும் எனது அரசின் குறிக்கோளாகும்.அதே போன்று, மனிதவளம் மேம்படவும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் அனைவரும் பயன்பெறத் தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் எனது திடமான எண்ணமாகும்.  இந்த அடிப்படையிலே தான், பல சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவங்கிட ஆணையிட்டுள்ளேன்.
குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கேற்ப, 60,000 கறவை மாடுகளை இலவசமாக வழங்க நான் முடிவெடுத்துள்ளேன்.  அதன் முதல் கட்டமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும்.  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
சங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்
பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். பசுக்களை இலவசமாக பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளிலிருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.  அவ்வாறு வாங்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும்,

பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும். இது மட்டுமல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.
அதே போல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள்
இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த அடிப்படையில், வரும் 5 ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும். 

கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும், நிலமற்ற ஏழை எளிய மக்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர்; இலவச பசுமாடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். பயனாளிகளே அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆடுகளை அருகில் உள்ள

சந்தைகளிலிருந்து, ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.  4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும்.  இந்தத் திட்டத்திலும் முதற் கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு உன்னதத் திட்டங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில், மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் ஒன்றை வகுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: