சனி, 9 ஜூலை, 2011

"சத்து மாவு தொழில் குடும்பத்துக்கு தெம்பு கொடுத்தது!'

சத்து மாவு தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள, இயற்கை மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி சுகந்தி: இரண்டு வயதாகியும், என் மகன் நடக்க சிரமப்பட்டான். என் பாட்டி சொன்ன வைத்தியம் தான், எங்கள் குழுவின் வளர்ச்சிக்கு ஆணி வேர். "கம்பு வறுத்து, திருகையில் திரிச்சு, பொரிகடலை, நிலக்கடலை இடிச்சு, அதை மல்லு துணியில் போட்டு சலித்து எடுத்து, அதில் கருப்பட்டியை கொஞ்சம் கலந்து, சுடு தண்ணீரில் பிசைஞ்சு பிள்ளைக்கு கொடுத்தா, சூம்பின பிள்ளைங்க விரைப்பா வந்துடும்' என்றார். நானும், அதோ போல் செய்து, என் மகனுக்குக் கொடுத்தேன். ஒரு மாதத்தில் தெளிந்து, எட்டு நடக்க ஆரம்பித்து விட்டான். எங்கள் ஊரில் பலரும் இதுபற்றி கேட்க, அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். இதையே ஒரு தொழிலாக தொடங்கலாம் என நினைத்து ஆரம்பித்தேன். கடந்த, 2003ல், மகளிர் சுய உதவிக் குழு துவங்குவதற்காக ஊருக்கு வந்த அதிகாரிகள், பெண்கள் தொழில் செய்தால், அரசு உதவும் என்று சொல்ல, சத்து மாவு பற்றி அவர்களிடம் கூறினேன். இதை தொழிலாக செய்தால், வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறினர். அதன்பின், நான்கு பெண்கள் சேர்ந்து குழுவை ஆரம்பித்து, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வணிக வளாகத்தில், "இயற்கை சத்து மாவு' என்ற பெயரில் தொழில் ஆரம்பித்தோம். அரசு சார்பிலும் பயிற்சி கொடுத்தனர். அதன் மூலம், சில புது விஷயங்களையும் கற்றுக் கொண்டோம். சுய உதவிக்குழு தயாரித்த பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி, சென்னையில் நடந்தது. அங்கு, "இயற்கை சத்து மாவு' ஸ்டால் போட்டோம். அதில், எங்க மாவின் தரம் குறித்து சோதித்த அரசு அதிகாரிகள், மாதம் 500 கிலோவுக்கு ஆர்டர் கொடுத்தனர். மாதம் எங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை: