புதன், 6 ஜூலை, 2011

ஆலயங்களில் படோபகார நிகழ்வு செலவை மீளக்குடியமர்ந்த மக்களின்

மீளக்குடியமர்ந்த நம் உறவுகளுக்கு நாம் என்ன செய்தோம்?


வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றது.

சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது நல்ல விடயமாயினும், மீள்குடியமரும் போது தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது கட்டாயம் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்தவித வருமானமும் இல்லாமல் முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் மீளக்குடியமரும் போது அவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகள் தேவைப் படும்.

இந்த உதவிகளை அரசாங்கம், உலக நாடுகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழங்குதல் என்பதற்கு அப்பால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமரும் எமது உறவுகளுக்கு நாங்கள் செய்த உதவி என்ன? என்ற கேள்வி எங்கள் ஒவ்வொருவரையும் உறுத்தவே செய்யும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடூரமான போரில் எல்லாவற்றையும் இழந்த எமது மக்களின் அவலம் போக்குவதற்கும் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் இழந்த கல்வியை மீளப்பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை செய்தாக வேண்டும்.

இதற்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் ‘மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் அமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்புகள் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியுதவியினைப் பெற்று அந்த நிதி மூலம் அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவுகளில் மீளக்குடியமர்ந்த மக்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சி என்பவற்றுக்கான பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

இது மட்டுமன்றி உள்ளூரிலும் நிதி சேர்க்கும் முயற்சிகளைச் செய்யலாம். ஆலயங்களில் இடம்பெறும் படோபகார நிகழ்வுகளைத் தவிர்த்து அதற்கான செலவை மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்குதல் மற்றும் சிறு தெய்வங்களுக்கு மிகப்பெரிய ஆலயங்கள் நிர்மாணிப்பதை விடுத்து சிறு தெய்வங்களை சிறிய ஆலயங்களிலேயே வழிபாடாற்றும் பாரம்பரிய நடைமுறைக்கு வழிவிட்டு பெரிய ஆலயமாக நிர்மாணிக்கவிருக்கும் மிகப்பெரும் தொகைகளை மீளக்குடியமர்ந்த மக்களின் நலனுக்காக ஒதுக்குதல் என்ற அடிப்படையில் ஒரு புதிய எழுச்சிப் பயணத்தைத் தொடர மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மிகவும் அவசியமானவை.

இதற்காக நாம் குறிப்பிட்டுக் கூறிய அந்த அமைப்புகளை ஆரம்பிக்க சமூக, சமயப்பற்றாளர்கள் முன்வர வேண்டும்

கருத்துகள் இல்லை: