செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

வடக்கு, கிழக்கு கடற்பிரதேசத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் மீன்பிடிக்கத் தடை

வடக்கு, கிழக்கு கடற்பிரதேசத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை மீறி தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு, கிழக்குக் கடற்பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்குக் கடற்பிராந்தியத்தில் தென்னிலங்கை மீனவர்கள் தாராளமாகத் தொழில் செய்வதால் இப்பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இதுகுறித்து அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது எடுத்துக்கூறப் பட்டிருந்தது.
இதேபோன்று கிழக்கு மீனவர்களின் வருமானத்தில் வயிற்றில் அடிப்பதுபோன்று வெளிமாவட்ட மீனவர்கள் அங்குவந்து கட்டுப்பாடு எதுவுமற்ற முறையில் தொழில் செய்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் தொழில் செய்வதற்கு அமைச்சர் தடை விதிப்புக் குறித்து மேலும் தெரிவித்ததாவது : இப்பகுதிகளில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் முன்னர் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. 25 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பிரச்சினை ஏற்படச் சந்தர்ப்பமளிக்க விரும்பவில்லை.
தென்பகுதி மீனவர்கள் தென்பகுதியிலும், வடக்குக் கிழக்குப்பகுதி மீனவர்கள் அந்தந்தப் பகுதியிலும் மீன்பிடிக்க முடியும்.
1980களில் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் என்றார். தென்பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பாகத் தம்மிடம் ஜனாதிபதி வினவியதாகவும், தமது நிலைப்பாட்டை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது அவரும் அதே நிலைப்பாட்டில் உள்ளதை அறிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்தால் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ராஜித சேனரத்னா கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி நாட்டின் எந்தப் பகுதியிலும் அந்தந்தப் பகுதி மீனவர்கள் தொழில் செய்ய தடைவிதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.

கருத்துகள் இல்லை: