வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

தலைமை சொல்லி ஒதுங்குவதைவிட, தானே ஒதுங்கும் முடிவுக்கு வீரபாண்டியார்

எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி

சேலம்: அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், மு.க.அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வந்தவர்கள் திருமண விழாவை விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி. ரயில் நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி சென்ற முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

பின்னர் உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு கவுதமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடக்கமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், முருகனுக்கு வீரபாகு. எனக்கு வீரபாண்டி ஆறுமுகம் என திமுக தலைவர் சொல்லுவார். கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை போல, எனக்கு வீரபாண்டி என்றும் சொல்லுவார்.

மிசா காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தோம். எனது தாயார் மீது சாரய வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது கூட எதற்கும் வருத்தப்படவில்லை. தலைவரை பார்க்க முடியவில்லையே என்றுதான் கவலையடைந்தேன்.

பெரியார், அண்ணா வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் முதல்வர் எனது இல்ல திருமணத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்கு நன்றி சொல்ல நீ யார்?, நன்றி சொல்லி என்னை பிரிக்கப் பார்க்கிறாயா?. இது எனது இல்ல திருமணம். நானும் இந்த திருமணத்துக்கு சொந்தக்காரன். நன்றி சொல்வது தமிழர்களின் மரபு. அந்த வகையில் வீரபாண்டியார் நன்றி சொல்லியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை. இருந்தபோதிலும் இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.

வரும் வழி முழுவதும் திமுக தோழர்கள் எனது உருவம் பொறித்த பேனர்களை வைத்திருந்தனர். அதில் என் கட்டைவிரல் உயர்த்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. எதிரிகளை வீழ்த்த தம்பிகள் இருக்கிறார்கள். நமக்கு எப்போதும் வெற்றிகளே குவியும்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், அழகிரியும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் திருமண விழாவைவிட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள். வீரபாண்டியாரே ஆவேசமானவர். அவரே இங்கு நாகரீகமாக பேசினார். இதுபோன்ற நல்ல மேடைகளில் கெட்ட பெயர்களை உச்சரிக்க வேண்டாம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், லட்சியங்களையும் இளைஞர்கள் போற்றி பாதுகாத்து சுயமரியாதை உணர்வுடன் விளங்க வேண்டும். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம், பட்டுகோட்டை அழகிரி ஆகியோர் வலியுறுத்திய கொள்கைகளை பின்பற்ற வேண்டும். தமிழர்களின் பண்பாடு, வரலாறு, பகுத்தறிவு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியார், அண்ணா ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை உணர்வை எந்த சூழ்நிலையிலும் திராவிட இயக்கத்தினர் மறந்துவிடக் கூடாது என்றார்.

(சமீபத்தில் மேட்டூரில் குடிநீர் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், இந்தத் திட்டம் நிறைவேறும்போது தமிழகத்தின் முதல்வராகத் தலைவர் கருணாநிதி தான் இருப்பார். ஆனால், நான் அப்போது அமைச்சராக இல்லாவிட்டால்கூட நிச்சயமாக திமுகவின் ஒரு தொண்டனாக, சாதாரண ஆறுமுகமாக அந்த விழாவில் கலந்துகொள்வேன் என்று பேசியிருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலி்ல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வசதியாக வீரபாண்டியாரை ஒதுங்குமாறு துணை முதல்வர் ஸ்டாலினும் கட்சித் தலைமையும் சொல்லக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமை சொல்லி ஒதுங்குவதைவிட, தானே ஒதுங்கும் முடிவுக்கு வீரபாண்டியார் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் தான் இன்றைய திருமண விழாவில் நன்றி சொல்லி என்னைப் பிரிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதாகக் கருதப்படுகிறது.)

முன்னதாக இந்தத் திருமண விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசுகையில்,

ஜெயலலிதா எல்லா இடங்களிலும் திமுக தலைவரை தரக்குறைவாக பேசுகிறார். திமுக மைனாரிட்டி அரசு என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போது மேஜர் ஆனார். பராசத்தி, தாயே, செல்வி ஜெயலலிதா என அதிமுகவினர் பேனர் வைக்கின்றனர்.

செல்வி ஜெயலலிதா என்றால், கன்னி தாய் என பெயர் வைக்கிறார்களா? ஹார்லிக்ஸ் விவகாரத்தில் என் மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் இனி எதையும் பேச வேண்டாம் என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக தலைவரை தவறாக சித்திரத்து பேசுகிறார் ஜெயலலிதா. திமுக தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.

இன்று மாலை சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், செவிலியர் கல்லூரி, புதிய பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா, 921 குடியிருப்புகளுக்கு காவிரி தனிக்கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இரவில் சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலத்தில் திமுகவினர் பெருமளவில் குவிந்துள்ளனர். சேலம் முழுவதும் திமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் என அமர்க்களமாக உள்ளது.

இந்த கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டி முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என ஏற்கனவே வீரபாண்டியார் கூறியுள்ளார். அதற்கேற்ப ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக உள்ளன.

இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 11.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்படுகிறார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: