செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

போலீஸ் அடித்து பி.வாசு டிரைவருக்கு சிறுநீரகம் சேதம்?

பிரபல திரைப்பட இயக்குநர் [^] பி வாசுவின் டிரைவரை போலீஸ் உதைத்ததால் சிறுநீரகம் பழுதடைந்ததா என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் [^] [^] உத்தரவிட்டது.

இது தொடர்பாக டிரைவர் பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் திரைப்பட இயக்குநர் பி வாசுவின் கார் டிரைவர். சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி என்னை சாதாரண உடையோடு வந்த போலீசார் திடீரென்று தூக்கி ஜீப்பில் போட்டு கொண்டு சென்றனர். எனது கண்களையும் கட்டிவிட்டனர்.

போகும் வழியெல்லாம் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினர். ஆள்கடத்தல், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நான் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறினர். நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு செல்லும் வழியில் என்னை அடித்து சில வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

பின்னர் வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் என்னை போலீசார் ஆஜர்படுத்தினர். நான் வள்ளியூரில் துப்பாக்கியுடன் திரிந்ததாகவும், என்னுடன் மற்றொருவர் வெடிகுண்டுடன் இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ரிமாண்டு செய்யப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அங்கு ரத்த வாந்தி எடுத்தேன். எனவே என்னை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து என்னை நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 13.3.10 அன்று டிஸ்சார்ஜ் ஆனேன். எனக்கு காயம் ஏற்பட்டதற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் அருள், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சூரியகுமார், போலீசார் சாகுல் அமீது, சீனிவாசன் ஆகியோர் தான் காரணம். இதுகுறித்து தமிழக அரசு, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு 23.3.10 அன்று புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை [^] எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தை தகுந்த போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்..."

-இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார் டிரைவர் பாஸ்கரன்.

இந்த மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், "சிறையில் சேர்த்தபோதே பாஸ்கரனுக்கு காயம் இருந்துள்ளது. சிறை ஆவணங்களை பார்க்கும்போது இது தெரிகிறது. ஆனால் காயம் எப்படி, எங்கு, யாரால் ஏற்பட்டது என்பதையெல்லாம் விசாரித்தால்தான் தெரிய வரும்.

பாஸ்கரனின் புகாரை விசாரித்தால்தான் உண்மைகள் தெரிய வரும். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்..." என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: