செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி

 எஸ்.பொ.’ சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறு:  

மகாநாட்டு அமைப்பாளர்  இந்திய ரூபாவில் பத்துக்கோடி நட்டஈடு கோருகிறார்

இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கு எதிராக தமிழ்நாடு கீற்று இணைய இதழில் அவதூறான முறையில் செய்தி வெளியிட்டிருப்பதுடன் அதனை உலகெங்கும் பரவச்செய்து மகாநாட்டையும் மகாநாட்டுப்ணியாளர்களையும் அவமானப்படுத்தியுள்ள ‘எஸ்.பொ.’ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்பவருக்கு எதிராக இம்மகாநாட்டின் அமைப்பாளர் நட்டஈடுகோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
இம்மகாநாடு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனும் அரச அதிபர் திரு. மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் பெற்றும் நடத்தப்படவிருப்பதாக உண்மைக்குப்புறம்பான  முறையில் முற்றிலும் தவறான செய்தியை விஷமத்தனமாக எஸ்.பொன்னுத்துரை பரப்பியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகிற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்கும் இந்த சர்வதேச மகாநாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும் எவ்வாறு இம்மகாநாடு பல வருடங்களாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காகவும் அதன் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் மகாநாட்டின் அமைப்பாளரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவுஸ்திரேலியாவிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இம்மகாநாடு பல வருடங்களாக ஆலோசிக்கப்பட்டு இலங்கையில் அமைதியான சூழ்நிலைக்காக காலம் தாழ்த்தி தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் 6,7,8,9, ஆம் திகதிகளில் நடத்தப்படவிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சுமார் 120 பேர் கலந்துகொண்ட விரிவான ஆலோசனைக்கூட்டம் காலை முதல் மாலை வரையில் நடந்தது.
இக்கூட்டத்தில் 12 அம்ச கலை, இலக்கிய , கல்;வி சார்ந்த ஆக்கபூர்வமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்துள்ளது.
அத்துடன் மகாநாட்டின் இலங்கை இணைப்பாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகம் சென்று விரிவான தகவல் அமர்வு சந்திப்புகளையும் நடத்திவருகிறார்.
சர்வதேச தரத்தில் அமைந்த ஒரு கட்டுரைத்தொகுதியும் புகலிடத்தை சித்திரிக்கும் புத்தம் புதிய கதைகளின் தொகுப்பும் ஈழத்து சிறுகதைகளின் தொகுப்பொன்றும் இம்மகாநாட்டை முன்னிட்டு தயாராகி வருகின்றன.
அத்துடன் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு மகாநாட்டு கருத்தரங்குகளில் கட்டுரைகளும் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சில இலக்கிய இதழ்கள் மகாநாட்டை முன்னிட்டு சிறப்பு மலர்களை வெளியிடவுள்ளன.
இவ்வளவு பணிகளும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களின் ஆதரவுடனும் நிதிப்பங்களிப்புடனும்தான் முன்னெடுக்கப்படுகின்றன.
இதுபற்றிய பல பத்தி எழுத்துக்கள் நேர்காணல்கள் இலங்கை மற்றும் தமிழ்நாடு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தத்தகவல்கள் யாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டே யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்துவருபவருமான எஸ்.பொ. என அழைக்கப்படும் திரு.எஸ்.பொன்னுத்துரை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ‘கீற்று’ என்னும் இணைய இதழில் மகாநாட்டுக்கு எதிராகவும் மகாநாட்டை இழிவுபடுத்தும்விதமாகவும் மகாநாட்டு அமைப்பாளர்  இலங்கை அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இம்மகாநாட்டை நடத்தவிருப்பதாகவும் உண்மைக்குப்புறம்பான முறையில் முற்றிலும் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற அமைப்பை ஸ்தாபித்து நடத்திவரும் முருகபூபதி ஆகிய நான் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் இந்த மகாநாட்டுக்கான பணிகளை பலரதும் ஆலோசனைகளைப்பெற்று முன்னெடுத்தேன்.
சில வருடங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட திரு.எஸ்.பொன்னுத்துரை அவர்களையும் அவுஸ்திரேலியாவில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவுக்கு அழைத்து அவரது பவளவிழாவை முன்னிட்டு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துமிருக்கின்றேன்.
எமது கலை,இலக்கிய வளர்ச்சியையும் பரிமாணத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கும் எஸ்.பொ. அவர்கள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கலை, இலக்கிய இயக்கமானது சர்வதேச மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படுவது கண்டு பூரிப்படைந்து, தாமும் ஒரு பங்காளராக இணைந்து செயற்பட்டிருக்கவேண்டும். அதுவே அவர் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் இனி வரும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்திருக்கும்.
இது சம்பந்தமாக கடந்த 2009 ஆம் ஆ;ண்டு இறுதியிலேயே அவரது கவனத்திற்கு தமிழ்நாடு யுகமாயினி இதழ் ஆசிரியர் திரு.சித்தன் அவர்கள் ஊடாக தெரிவித்துமிருக்கின்றேன்.
எனினும் அவர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் விஷமத்தனமாகவும் அவதூறாகவும் அவர் கீற்று இணைய இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதுவித நம்பகத்தன்மையுமற்றவிதத்தில் அநாவசியமாக இலங்கை அதிபரையும் இதில் இணைத்து மகாநாட்டுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை மேற்கொண்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ருபா நட்ட ஈடுகோரி நான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவிருக்கின்றேன்.
‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி’- என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.
லெ.முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011
அவுஸ்திரேலியா முகவரி
P.O.Box 350, Craigieburn,Victoria,Australia.
             letchumananm@gmail.com
T.Phone : 00 11 61 3 9308 1484

கருத்துகள் இல்லை: