சனி, 9 அக்டோபர், 2021

நீட் தேர்வு குறிதது ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம்,பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு!

ஏ.கே.ராஜனின் அறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு!

மின்னம்பலம் : நீட் தேர்வு தாக்கம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ்,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மாற்றுவழி குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இக்குழு, நான்கு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நீட் தேர்வு தொடர்பான தகவல்களை திரட்டியும், பொதுமக்களிடம் கருத்து கேட்டும், ஆய்வுகளை மேற்கொண்டது.


அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 165 பக்கங்களை கொண்ட நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டு, அதனை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று சுகாதாரத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழ்நாடு திரும்பலாம். நீட் தேர்வு, பயிற்சி மையங்களைப் பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கையை தமிழ், இந்தி, மலையாளம்,பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ”நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் நீட் தேர்வு பற்றிய அறிக்கையை இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அனுப்பிட ஏதுவாக, 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அப்பிரதிகள் நேற்று(அக்டோபர் 8) தமிழ்நாடு முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

சமீபத்தில், நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கருத்துகள் இல்லை: