ஞாயிறு, 3 அக்டோபர், 2021

நடிகர் ஷாருக்கானின் மகன் கப்பல் போதை பார்ட்டியில் கைது .. மும்பாய்

 மின்னம்பலம் : நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை ரியா சக்ரவர்த்தி, அவர் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3,000 கிலோ ஹெராயின் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டது.
தற்போது மும்பையிலிருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாகப் புறப்பட்ட கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதும், அதிலும் குறிப்பாகப் பிரபல பாலிவுட் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆரியன் கான் பிடிபட்டதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்பிரஸ்’ கப்பல் மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலாப் பயணிகளுடன், 3 நாள் பயணத்தைத் தொடங்கியது. இரண்டு நாட்கள் அரபிக் கடலில் கழித்துவிட்டு, மீண்டும் 4ஆம் தேதி மும்பை திரும்பும் வகையில் பயணத் திட்டம் போடப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாக இதுபோன்று சொகுசுக் கப்பலில் உல்லாச பயணம் மேற்கொள்ளும் போது போதைப் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து, கார்டெலியா குருஸஸில் பயணம் மேற்கொண்டனர்.

சக பயணிகள் போன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஆனதும், ஆடல் பாடல் என ‘ரேவ்’ பார்ட்டி தொடங்கியது. ஃபேஷன் டிவி இந்தியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த நமஸ்க்ரே எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் இணைந்து இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள், மாடலிங், சினிமா மற்றும் பிசினஸ் துறைகளைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.

பார்ட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சாரஸ், எம்.டி, கோகாயின் உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயணிகள் மற்றும் விருந்தினர்கள் சிலர் பயன்படுத்தியதைப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் உடனடியாக சோதனையில் குதித்த அதிகாரிகள், பயணிகளின் அறைகள் மற்றும் லக்கேஜுகளில் சோதனை செய்தனர். சுமார் 7 மணி நேரம் கப்பல் முழுவதும் சோதனை நடத்தினர். இதையடுத்து, 2 பெண்கள் உட்பட 8 பேரை போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்திய இளைஞர்கள், இளம் பெண்களையும் தனிமைப்படுத்தி விசாரித்தனர். அவர்களில் இந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரிய வந்தது. இந்த சோதனை காரணமாக பார்ட்டி இரவே நிறுத்தப்பட்டு பிடிபட்டவர்கள் மும்பைக்குத் திரும்பி அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டப் பிரிவில் கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதுபோன்று அவர்களது செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். ஆரியன் கான் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 8சி, 20பி, 27 மற்றும் 35 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜெஜெ மருத்துவமனையில் நடந்த பரிசோதனையைத் தொடர்ந்து மீண்டும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆரியன் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் கைதான மூன்று பேரும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதுபோன்று, இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஃபேஷன் டிவி இந்தியாவின் இயக்குநரான காஷிஃப் கானும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

தனது மகன் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் ’பத்தான்’ படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை: