வெள்ளி, 8 அக்டோபர், 2021

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

 மின்னம்பலம் : 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்டோபர் 7) சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
தான்சானியாவை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ரசாக் குர்னாவுக்கு வயது 73. 1960ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அகதியாக வந்த இவர், கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். 

தன்னுடைய 21 வயதில் எழுத தொடங்கினார். அவரின் தாய்மொழியாக சுவாஹிலி இருந்தாலும், தன்னுடைய இலக்கிய புலமையை வெளிப்படுத்த ஆங்கில மொழி கருவியாகப் பயன்பட்டது. இவர், புக்கர் பரிசுக்குப் பட்டியலிடப்பட்ட 'பாரடைஸ்' உள்பட 10 நாவல்களை எழுதியுள்ளார்.

1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரடைஸ், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான்சானியாவில் வளர்ந்த ஒரு சிறுவனின் கதையைக் கூறுகிறது. மேலும் சில சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சமையலறையில் இருந்த அப்துல் ரசாக் குர்னாவுக்கு, அவர் நோபல் பரிசு வென்றது பற்றி தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர், “இது பிராங்காக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பு இப்படி பொதுவாகச் சொல்வது வழக்கம்தானே. அதனால் என்னை பிராங் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அதற்கு பிறகுதான், அது உண்மை என்று தெரிந்தது.

இது மிகப் பெரிய பரிசு. இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதைக் கேட்கும்வரை என்னால் நம்ப முடியவில்லை. இந்த விருதை பெறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

2020ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் என்பவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கருத்துகள் இல்லை: