சனி, 9 அக்டோபர், 2021

கடலூர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ரமேஷிடம் ராஜினாமா வாங்கிய ஸ்டாலின்

கடலூர் மக்களவைத்  தொகுதிக்கு இடைத்தேர்தல்: ரமேஷிடம் ராஜினாமா வாங்கிய ஸ்டாலின்

மின்னம்பலம் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக எம்பியான ரமேஷ் தனது முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்ற தொழிலாளியை அடித்துக் கொன்றதாக கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
இந்த விவகாரத்தில் மின்னம்பலம் ஊடகம் மட்டுமே ஆரம்பம் முதல் தொடர்ந்து உண்மைகளை புலனாய்வு செய்து வாசகர்களுக்கு தெரிவித்து வந்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் 20 ஆம் தேதி காலை கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில், “எனது தந்தை கோவிந்தராஜை திருட்டு பட்டம் சுமத்தி முந்திரி ஆலை உரிமையாளர் ரமேஷ் எம்.பி. உள்ளிட்டோர் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் கொடுத்தார்.


இந்த விவகாரத்தை கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து தீவிர விசாரணை நடந்தது ரமேஷின் முந்திரி ஆலை மேனேஜர் நடராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் அடுத்ததாக எம்பிஏ ரமேஷ் கைது செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த கொலை புகார் எம்பி மீது எழுந்த நிலையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இருந்து துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை எம்பி ரமேஷைத் தொடர்பு கொண்டு, “உங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் தலைமையிடம் பேசி பார்க்க முடிவு செய்த ரமேஷ் சென்னை சென்றார். ஆனால் அவரை சந்திக்க தலைமை கழக நிர்வாகிகள் யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரமேஷிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை திமுக தலைமை எழுதி வாங்கி விட்டதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மூலமாக இந்த ராஜினாமா கடிதம் மக்களவை சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பிறகே ரமேஷ் கைது செய்யப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒரு எம்பி கொலை வழக்கில் கைது செய்யப்படுவது என்பது கட்சிக்கு அவப்பெயர் ஆகும் என்பதாலும், இது இந்திய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறும் என்பதாலும் தனது இமேஜை பாதுகாக்க, ரமேஷிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள்.

இதற்கிடையில் ரமேஷ் எம்பி ராஜினாமாவை அடுத்து எந்நேரமும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரக்கூடும் என்பது அரசியல் ரீதியான அடுத்த பரபரப்பு.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: