புதன், 6 அக்டோபர், 2021

விவசாயிகள் மீது கார் ஏற்றியதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை" அதிர்ச்சித் தகவல்

"விவசாயிகள் மீது கார் ஏற்றியதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை": குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

கலைஞர் செய்திகள்  : விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனிடையே லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிச் செல்லும் வீடியோவை நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தக் கொடூர சம்பவத்தை உள்ளூர் செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவர்தான் எடுத்துள்ளார். இவர் சாத்னா பிரைம் நியூஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.


கடந்த ஞாயிறன்று லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போது தான் பா.ஜ.கவினரின் கார்கள் விவசாயிகள் மீது ஏறிச் சென்றது. இதை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அவரைக் காணவில்லை.

பின்னர் அடுத்தநாள் மருத்துவமனையின் பிணவறையில்தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நிலையில் சிகிச்சையில் சேர்ந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் இவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மகனை சுட்டுக் கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் தனது மகன் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: