திங்கள், 16 ஆகஸ்ட், 2021

Emirates of Afghanistan எமிரேட்ஸ் அப் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆப்கான் பெயரை மாற்ற போகிறார்களாம்

 Veerakumar -   Oneindia Tamil  :  காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது.
ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியோடு தாலிபான்கள் ஒடுக்கப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
ஆப்கானிஸ்தானில், இப்போது மீண்டும் தாலிபான்கள் எழுச்சி பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா எதிர்ப்பு காட்டாமல் ஏற்கனவே உறுதி அளித்தபடி தனது படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் பல பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள் இறுதியாக நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றினார். அதிபர் மாளிகை அவர்கள் வசமானது.


முன்னதாக, அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அண்டை நாடுகளில் ஏதாவது ஒன்றில் அவர் அடைக்கலம் அடைந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஆண்டு காலமாக காபூல் நகரம் வளர்ச்சி பாதையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

அங்கு இப்போது ரத்தக்களறி ஏற்பட்டு வளர்ச்சி பாதித்து விடக்கூடாது என்பதற்காக நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று அஷ்ரப் கானி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இருப்பினும் அவர் எங்கே இருந்து இந்த வீடியோவை வெளியிட்டார் என்று தகவலை கூறவில்லை.

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று தாலிபான்கள் மாற்ற உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாலிபான்கள் அமெரிக்க படைகளால் ஒடுக்கப்படும் வரை இந்தப் பெயர்தான் தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு சூட்டப்பட்டிருந்தது. மீண்டும் இதே பெயரை சூட்ட இருப்பதாக தாலிபான்களின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும், இருப்பினும் பெயர் வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கு மக்கள் முண்டியடித்து காபூல் விமான நிலையத்தில் குவிந்ததால், பெரும் கூட்டமாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


உள்ளூர் பேருந்துகளில் முண்டியடித்து ஏறுவது போல விமானத்தில் பலரும் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது . தாலிபான்கள் முந்தைய காலத்தை போல கடுமையான சட்டத்திட்டங்களை அமலுக்கு கொண்டு வருவார்கள் என்பதால் பயந்து போய், கணிசமான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் , தாலிபான்களின் கைக்குள் சென்று விட்டதால் இனி பல்வேறு ஓசாமா பின்லேடன் மற்றும் முல்லா உமர் போன்றவர்கள் உருவாக்குவார்கள் என்று கவலை தெரிவித்துள்ளனர் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் மக்கள். தங்கள் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சுதந்திரம் மறுக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: