ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா.. தமிழில் ‘சைவ திருமுறைகள்’ பாடும் வீடியோ

 Rayar A  -   Oneindia Tamil :   சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகராக சுஹாஞ்சனா நியமிப்பட்டுள்ளார்.
இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது.
அனைத்து ஜாதியினரும் இனி அர்ச்சகர் ஆகலாம்: கலைஞரின் கனவை நிறைவேற்றி..வரலாறு படைத்த ஸ்டாலின் அரசு!
அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவித்து பல தரப்பினரின் பாராட்டை பெற்றது. இதனை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது.

 51 ஆண்டுகளுக்கு பிறகு 51 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

தி.மு.க அரசின் 100-வது நாளான நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இதில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். 27 வயதாகும் இவர், திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள இவர் இன்று அக்கோயிலில் தனது பணியைத் துவங்கினார்.

தமிழில் ‘சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். தனது பணி குறித்து சுஹாஞ்சனா மகிழ்வுடன் கூறுகையில், 'ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் விருப்பப்பட்டு
ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: