வியாழன், 19 ஆகஸ்ட், 2021

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 16 பேர் தற்கொலை முயற்சி

  மாலைமலர் : கடந்த மாதம் சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி  மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்காளதேசம், நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர்.
இந்தநிலையில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர் என்றும் இலங்கை அகதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கொரோனா காலத்திலாவது எங்களை விடுதலை செய்ய வேண்டும்.
குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
 கடந்த மாதம் சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லாததால் அவர்கள் வேதனையுடன் இருந்தனர். நேற்று திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 14 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் டிக்சன், ரமணன் ஆகியோர் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளை அறுத்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த சிறைக்காவலர்கள் மற்றும் கே.கே.நகர் போலீசார் அங்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 16 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு சம்பவம் நடந்த சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சிறப்பு முகாமில் அகதிகள் உடல் நலம் சரியில்லாத சமயங்களில் வழங்கப்படும் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வைத்துகொள்வார்களாம். அந்த மாத்திரைகளை தின்றுதான் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: