வியாழன், 17 ஜூன், 2021

விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

 விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

minnambalam :விளை நிலங்களுக்கே நேரிடையாக சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர். மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை பாதுகாப்பாக கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் பணியாக இருக்க வேண்டும். விவசாயிகள் பாதிப்படையக் கூடாது. மழையில் நெல் வீணாவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது சம்பந்தமாக விவரங்களை பெற்று தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று(ஜூன் 17) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். இவை மேலும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இதைப்பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களிலிருந்து தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே நேரில் சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும் இதுகுறித்தான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

கருத்துகள் இல்லை: