செவ்வாய், 15 ஜூன், 2021

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்கு? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை: மீன்களின் இனப்பெருக்கத்திற்குதானா? கேள்வி எழுப்பும் மீனவர்கள்!

கலைஞர் செய்திகள் :இலங்கை அரசு, மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளைக் கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதுவும், குறிப்பாக இலங்கை காங்கேசன் துறைமுகம் முதல் மன்னார் வரை உள்ள கடல் பகுதியில்தான் பழைய பேருந்துகள் இறக்கப்பட்டு வருகிறது. மேலும் பயன்படுத்த முடியாத 40 பழைய பேருந்துகளைக் கடலில் போட இலங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதில், முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், 20 பேருந்துகள் கடலில் இறக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு நாளைக்கு ஐந்து பேருந்துகள் வீதம் கடலில் இறக்கப்பட்டு வருகிறது.



இந்த பணி முடிந்ததும் அடுத்து மேலும் உள்ள 20 பேருந்துகள் கடலுக்குள் இறக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது, தமிழ்நாட்டில் நாளையுடன் மீன்பிடி தடைகாலம் முடிவதால், கடல் பகுதியில் இலங்கை அரசு பழைய பேருந்துகளைப் போட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கை அரசு மீன்களின் இனப்பெருக்கத்திற்கு என்று சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை என தமிழக மீனவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், மீன்கள் இனப்பெருக்கம் என்ற ஒரு காரணத்தைக் கூறி தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க வருவதைத் தடுப்பதற்காகவே இலங்கை அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: