சனி, 19 ஜூன், 2021

கந்துவட்டி- முகம்மதலி தற்கொலை! மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் நால்வர் கைது

May be an image of 1 person and standing

ஜெ. அப்துர் ரஹ்மான்  : மதுரை: `யாரையும் டார்ச்சர் பண்ணாதீங்க!’ - கந்துவட்டிக் கொடுமையைச் சொல்லும் மரண வாக்குமூலம்.  
மரண வாக்குமூலம் என்று கூறி வீடியோவில் பேசும்போதே முகமது அலி கதறி அழுகிறார். பார்ப்பவர்களுக்கு நெஞ்சம் பதறுகிறது.
‘‘நான் கடனில் சிக்கிட்டேன். வக்கீல் செல்வகுமார்கிட்ட அஞ்சு லட்சம் கடன் வாங்கி ஆறு லட்சம் வரை வட்டி கட்டியிருக்கேன். ஆனா, இன்னும் அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்றாங்க. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க. வெத்துப் பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கேன். என்னோட, என் மனைவியோட செக் லீஃப் கொடுத்திருக்கேன். அவங்க ரொம்ப மோசமா நடந்துகிறாங்க. நான் சாகறதுக்கு அவங்களே காரணம்.


செல்வகுமார் மட்டுமல்ல... ஜெயந்திரசிங், காமாட்சி, மாரிமுத்து இவங்களும் அதிகம் டார்ச்சர் செஞ்சாங்க. இந்த ஜெயந்திரசிங் பத்து வட்டி, பனிரெண்டு வட்டி வாங்குவார். கடனைத் திருப்பி தரலைனு சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல என் மீது புகார் கொடுத்தார். நான் கடன் வாங்கி மாத்தி மாத்தி வட்டி கட்டியே சரியா போச்சு. என்னால ஒண்ணும் பண்ண முடியல. என்னை ரொம்ப அசிங்கமா, கேவலமா பேசுறாங்க. என்னால முடியல. பச்சைப் பிள்ளைகளை விட்டுட்டு தற்கொலை செஞ்சுக்கப் போறேன். என் மனைவியையும் மத்தவங்களையும் டார்ச்சர் பண்ண வேணாம்’’ - மரண வாக்குமூலம் என்று கூறி வீடியோவில் பேசும்போதே முகமது அலி கதறி அழுகிறார். பார்ப்பவர்களுக்கு நெஞ்சம் பதறுகிறது.
தான் இந்த முடிவுக்கு வருவதற்கான காரணத்தை வீடியோவில் முழுமையாகப் பேசிவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட முகமதுஅலி, கந்துவட்டிக் கொடுமைக்கு சமீபத்திய உதாரணமாகியுள்ளார். அந்தளவுக்கு ஊரடங்கிலும் அடங்காமல் கந்துவட்டிக் கும்பலின் அட்டகாசம் மதுரையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மதுரையின் மையப்பகுதியான மகபூப்பாளையம் அன்சாரி நகர் 7-வது தெருவில் வசித்து வந்தவர், 37 வயதாகும் முகமது அலி. மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளுடன் இட்லி மாவு வியாபாரம் செய்துவந்த நிலையில், ஜூன் 14-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாவதற்கு முன் அவர் பேசிய வீடியோதான் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. முகமது அலியின் மனைவி பாத்திமாவின் புகாரின் அடிப்படையில் கந்துவட்டிக்காரர்கள் செல்வகுமார், ஜெயந்திரசிங், காமாட்சி, மாரிமுத்து ஆகியோரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
முகமது அலியின் குடும்பத்தினர், வீட்டில் கவலையுடன் இருகிறார்கள். அழுது அழுது துவண்ட நிலையில் இருக்கும் இருக்கும் மனைவி பாத்திமா பேசும் மனநிலையில் இல்லை. தன் அடையாளங்கள் தவிர்த்து நம்மிடம் பேசிய முகமது அலியின் சகோதரி, ``ஆரம்பத்தில் முகமது அலி மொபைல் கடை வச்சிருந்தாப்ல. ரெண்டு வருசமாத்தான் வீட்டுக்கு பக்கத்துல சின்னதா ஹோட்டல் ஆரம்பிச்சார். கடையைப் பெருசாக்கணும்னு செல்வகுமார்கிட்டே வட்டிக்கு கடன் வாங்கியிருக்காரு. எதைப்பத்தியும் யோசிக்காம மோசமான ஆளுங்ககிட்டே வாங்கியிருக்காப்ல.
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. ஆரம்பத்துல சரியா வட்டி கொடுத்துட்டு வந்திருக்காப்ல. ஊரடங்கால வியாபாரம் இல்லாததால, கடந்த நாலு மாசமா வட்டி கொடுக்க முடியல. அதனால வட்டிக்காரங்க டார்ச்சர் செய்ய, அந்த வட்டியைக் கட்ட ஜெயந்திரசிங், காமாட்சி, மாரிமுத்து ஆகியோர்கிட்ட வட்டிக்கு வாங்கியிருக்காரு. இப்படியே அங்க வாங்கி இங்கே வாங்கி வட்டி கட்டிட்டு வந்திருக்காப்ல. இதனால தொழில் செய்ய பணம் இல்லாம ஹோட்டலை மூடிட்டாரு.
அப்புறம் வீட்டுலயே இட்லி மாவு அரைச்சு மனைவியோட சேர்ந்து வியாபாரம் செஞ்சாப்ல. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய்க்கு ஓடும். அதுல வர்ற பணத்தையும் சேர்த்து வட்டி கட்டிட்டு, ரெண்டு குழந்தைங்களோட நல்ல சாப்பாடு இல்லாம ரேசன் அரிசியை வெச்சு குடும்பம் நடத்திட்டு இருந்தாங்க.
என்னதான் கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து வட்டி கட்டணுமே... அவங்க இரக்கப்பட மாட்டாங்களே... கந்து வட்டிக்காரங்க நாலு பேரும் வீட்டுக்கே வந்து அசிங்கமா பேச ஆரம்பிச்சுருக்காங்க. தற்கொலை பண்ணிக்கிறதுக்கு முதல் நாள், மகள் பிறந்த நாளைக்கு ஒரு துணியாவது எடுப்போம்னு மகளை கடைத்தெருவுக்குக் கூட்டிட்டுப் போகும்போது,
அங்க நின்னுக்கிட்டிருந்த வட்டிக்காரர் மாரிமுத்து, ‘வாங்குன கடனுக்கு ஒழுங்கா வட்டி கொடுக்க முடியல. நீயெல்லாம் ஏண்டா உயிரோட வாழுற?’னு கேட்டது அவனை ரொம்பவும் பாதிச்சிருக்கு. (அருகில் நின்றுகொண்டிருந்த முகமது அலியின் மகள், அன்று நடந்ததை பயத்துடன் நம்மிடம் சொல்கிறார்.)
பெரிய ஆளுங்ககிட்டே சொல்லி பிரச்னையைச் சரிபண்ணலாம்னு சொன்னதுக்கு, ‘அது நியாயமில்லை. யாரையும் ஏமாத்த விரும்பல. வாங்கின கடனை நான் திருப்பி அடைச்சுடுவேன். ஆனா, அதிக வட்டி கேட்டு டார்ச்சர் பண்றதைதைத்தான் தாங்க முடியல’னு சொல்வான். வட்டிக்காரங்க சிலநேரம் அவங்களுக்குத் தெரிஞ்ச பெண்களை வீட்டுக்கு அனுப்பி அசிங்க அசிங்கமா திட்ட வைப்பாங்க. இதெல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கும். நண்பர்கள்கிட்ட கடன் வாங்கி கடனை அடைச்ச பிறகும், பத்திரத்தைக் கொடுக்காம இன்னும் அதிகமா பணம் கேட்டு டார்ச்சர் பண்ணியிருக்காங்க.
அன்னைக்கு நல்லாதான் வீட்ல பேசிட்டு இருந்தாப்ல. கடைசி தங்கச்சிக்கு சுகர் பிரச்னை இருக்குது. அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போயிட்டு வந்தான். பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா பேசிட்டு மாடிக்கு போனவன், கொஞ்ச நேரத்துல இப்படி பண்ணிட்டான்’’ என்று சொன்னவர், கதறி அழத் தொடங்குகிறார்.
பித்துப் பிடித்தவர் போல அமர்ந்திருந்த முகமது அலியின் தாயார் காதர் பீவி, ``என் மகன் என்னைவிட்டுப் போயிட்டான். தன் கஷ்டத்தை எதையும் எங்ககிட்டே சொன்னதில்லை. வட்டிக்காரங்க வீட்டுல வந்து கத்தும்போதுதான் விஷயம் தெரியும். ஆனா, எல்லார்கிட்டேயும் கடனை அடைச்சுடலாம்னு நம்பிக்கையா சொல்வான். நாங்க வாழ்றது வாடகை வீடு. ரெண்டு சின்ன புள்ளைகளோட அவன் பொண்டாட்டி எந்த ஆதரவும் இல்லாம நிக்குறா. என்ன செய்றதுன்னே தெரியல’’ என்று அழுதார்.
எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா உடனே விசாரணை நடத்தி தற்கொலைக்கு காரணமான நான்கு பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ரிமாண்ட் செய்துள்ளார்.
#என்.ஜி.மணிகண்டன்.
#செ.சல்மான் பாரிஸ்.

கருத்துகள் இல்லை: