செவ்வாய், 15 ஜூன், 2021

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 minnambalan : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட பத்து எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 14)அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தலைமை கழகத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் தளவாய் சுந்தரம், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகிய நான்கு பேரும் வந்தனர்.

இன்றைய கூட்டம் குறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

“தலைமை கழகத்துக்கு வந்ததும், ஓபிஎஸ், ஈபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் தனி அறைக்குச் சென்று பேசினார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவர் மட்டும் தனியாகப் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்தாக வேண்டும். இன்று முடிவு எடுக்கவில்லை என்றால் கட்சியினர் அதிருப்தியடைந்து விடுவார்கள். விமர்சனங்களும் எழும். எனவே, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் பேசியதை தொடர்ந்து 1.30 மணிக்கு கூட்டத்தை தொடங்கினர்.

அப்போது புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் உள்ளிட்டவர்கள் எழுந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு முடிவு எடுங்கள் அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு கூட்ட அரங்கிலிருந்து கலையத் துவங்கினர்.

சில எம்.எல்.ஏ.க்கள் கீழ் தளத்திற்கு வந்துவிட்டனர். பின்னர், அருண் மொழிதேவன் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து ‘அம்மாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. டாக்டரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு 2.45 மணியளவில் அங்கிருந்து கிளம்பினார்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒரு அறையில் தனியாக மீண்டும் பேசினார்கள். அப்போது ஈபிஎஸ், ‘எதிர்க்கட்சி தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன், நீங்கள் தலைவராக இருங்கள். நான் துணை தலைவராக இருக்கிறேன். எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது’ என உருக்கமாக பேசியுள்ளார். இதனால், ஓபிஎஸ் மனது இளகி, சரி நீங்களே முடிவுவெடுங்கள். ஆனால் நீங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்துதான், கொறடா பதவி வேலுமணிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி ஓபிஎஸுக்கும், துணை கொறடா பதவி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கும் வழங்கப்பட்டதை அறிவித்தார்கள்.

அதிமுகவில் பிளவுகள் ஏற்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாக காய் நகர்த்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்” என்கின்றனர்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: