ஞாயிறு, 13 ஜூன், 2021

அமரர் மு. சிவசிதம்பரம் ! மக்கள் ஆளுமைபெற்ற கடைசி தமிழ்த் தலைவர்! (உடுப்பிட்டி சிங்கம்)

May be a black-and-white image of 1 person

Amirthalingam Baheerathan : சிம்மக்குரலோன், ஆஜானுபாவமானோன் சிறந்த கனவான், துரோகமறியான். எனது தந்தையின் உற்ற நண்பன் எமது தலைவன். 1983 கலவரம் உச்சத்தை எட்டியிருந்த போது, கொழும்பில் அவரது வீடு எரிக்கப்பட்ட செய்தி வந்த போதும், அவரது மனைவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என வினா எழுந்த நிலையிலும் கலங்காது எமது மக்களை பாதுகாப்பதையிட்டு நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருந்த தலைவன். எனது தந்தையின் கொலையை தனது கண்முன்னே கண்டு துடித்து “எனது வாழ்நாளுக்கும் இந்த அவலம் போதும்” என மன உளைச்சல் அடைந்த பெருமகன். அன்னாரை நினைவில் நிறுத்துவோம். அன்றைய ஒற்றுமையை எண்ணி இன்றைய நிலையில் கண்ணீர் விடுகிறோம். நன்றி மாலி அண்ணா.  

Subramaniam Mahalingasivam  :  இலங்கையில் மக்கள் ஆளுமைபெற்ற கடைசி தமிழ்த் தலைவர்!
இப்படி ஓர் ஆரூடத்தை எவருமே சொன்னதில்லை.
கவர்ச்சிமிக்க பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் எட்டு ஆசனங்களை மட்டுமே வென்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராவதும், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராவதும்தானே வழக்கமாக கூறப்படும் வாக்கியம்?.
அதுவும், தனிநாடு கோரிக்கையுடன் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாகியது.
இலங்கை அரசியலில் முன்னெப்போதுமில்லாத விசேஷங்கள் 1977 பொதுத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டன.
திரு ஜே. ஆர். ஜயவர்த்தன, 5/6 பெரும்பான்மையுடன் முதன் முதலாக பிரதமரானார். ‘


தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மனத் தாங்கல்களில் அவர்கள் தனிநாடு கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும், சர்வ கட்சி மாநாட்டின் மூலம் இப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’ என்று, ஐக்கிய தேசிய கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தது.
இந்த மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரசில், தனி நாடொன்றை அமைக்கும் மக்களாணையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமரப்போகிறது. மிகப்பெரும் அரசியல் கயிறிழுத்தல் ஒன்றுக்கான முஸ்தீபுகளில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இக் கயிறிழுத்தலுக்கு தலைமைதாங்க மிகவும் ஏற்றவர் அமிர்தலிங்கமா அல்லது சிவசிதம்பரமா? தனிப்பட்ட விதங்களிலல்லாமல், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சிலரிடையே இக் கேள்வி மிகுந்த அக்கறையுடன் எழுந்தது.
பாராளுமன்றத்தில் ஜே. ஆர். ஜயவர்த்தனவையே எதிர்க்கட்சித் தலைவராக பார்த்த அநுபவத்தில், அவரே அப் பதவிக்கான ஒரு ‘மாதிரி’யாக (Model) என்னுள் தெரிந்தார். அந்த ‘மாதிரி’யாக, அப்போது அமிர்தலிங்கத்தைவிட சிவசிதம்பரம் எனக்குத் தெரிந்தார்.
திருநெல்வேலியில் அவர் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று, இதனை சூசகமாக அவரிடம் வெளிப்படுத்தினேன். ‘இல்லை தம்பி. அது அமிர்தான். அதில் கேள்விக்கோ, ஐயத்துக்கோ இடமில்லை’. - எள்ளளவு சலனமுமின்றி, முழு திடத்தோடு சொன்னார் சிவசிதம்பரம்.
இடதுசாரி கொள்கைகளின் ஈடுபாட்டில், இளமையில், கம்யூனிசவாதியான பொன். கந்தையாவுக்கு ஆதரவாகவிருந்தவர், சுயேச்சை வேட்பாளராக 1956 பொதுத் தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் தோல்வியுற்றார். ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டு, 1960 பொதுத் தேர்தலில், புதிதாக உருவான உடுப்பிட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தமிழ் காங்கிரஸ் காரராகவே அவர் அடையாளம் பெற்றாலும், மு. சிவசிதம்பரம் ஒருபோதுமே கட்சி அரசியல் செய்தவர் அல்லர். தமிழ் மக்கள் கட்சி அவருடைய கட்சி. தமிழரசு கட்சி நடாத்திய சத்தியாக்கிரகத்தில் - தபால்  சட்டத்தை மீறிய சட்ட மறுப்பு நடவடிக்கையாக, தபால் விநியோகம் செய்தவர்.
மேயர் துரையப்பா கொலைவழக்கு முதல், குட்டிமணி, தங்கத்துரை வழக்கு முதலான அனைத்து வழக்குகளிலும் ஆஜரானவர். சிறந்த குற்றவியல் வழக்கறிஞர். ஆஜானுபாகுவான தோற்றமுடைய அவர், இந்த வழக்குகளில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே வாதிடுவார். பொலிசாருக்கு சிம்ம சொப்பனமாக தெரிவார்.       
அமிர்தலிங்கம்தான் எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், அவரின் தீரமிக்க தளபதி சிவசிதம்பரம். பாராளுமன்றத்தில் எப்போதும் அமிர்தலிங்கத்தின் பக்கத்தில் அவர் இருப்பார். அது அமிர்தலிங்கத்தின் பெரும் கவசம். பெரும் வீரியம்.
விவாதத் திறனில் - குறுக்கீடுகளுக்கு பதிலடி கொடுப்பதில், மு. சிவசிதம்பரம் அசகாய சூரர். ‘இரட்டைக் குழல் பீரங்கி’ என்றுதான் இவரையும் அமிர்தலிங்கத்தையும் மனதார்ந்து குறிப்பிட்டுச் சொல்வார் ஐ. தே. க. வின் மற்றொரு பீரங்கியான லலித் அத்துலத்முதலி.

கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சரான சிறில் மத்தியூ, இனவாதத்துக்கான அமைச்சர் போலவுமிருந்தார். ‘பிங்’ அல்லது நீல கலர் பைலுடன் அவர் சபைக்குள் நுழைந்தால், அது  ஒரு சண்டமாருதத்துக்கான ‘வானிலை அறிவிப்பு’. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, சிரிப்பும் சினமும் கொள்வார்கள். பெரும்பாலும், சண்டமாருதம் சுழித்தடித்தார்த்துத்தான் ஓயும்.
உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்துவதில் தமிழ் ஆசிரியர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியவர் சிறில் மத்தியூ. இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் வன்மையாக வாதிட்டு, நிர்மூலமாக்கியவர் சிவசிதம்பரம். உண்மையில், கல்வி சமூகமும் தமிழ் சமூகமும் பெரு நன்றியோடு என்றும் நினைவில் கொள்ளவேண்டியது இது.

சிறந்த வழக்கறிஞரும் பாராளுமன்ற வாதியுமான சிவசிதம்பரத்தின் வாதங்கள் நீதிமன்றத்திலும்சரி, பாராளுமன்றத்திலும்சரி எப்போதும் கனகச்சிதமாக இருக்கும். காஷியமான குறுக்கீடுகளும் செய்வார்.
குழந்தைகளின் போஷாக்கில் தாய்ப்பாலின் அவசியத்தையும் நன்மையையும் அமைச்சர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். சிவசிதம்பரம் குறுக்கிட்டு, ‘அழகான கொள்கலனிலிருந்துகூட கிடைக்கிறது’ என்றார்!
பட்ஜட் விவாதம் ஒன்றில், நாட்டில் முந்திரி (கஜு) உற்பத்தியை பெருக்கவல்ல முறைகள் பற்றி  பருத்தித்துறை எம். பி. துரைரத்தினம் விரிவாக பேசிக்கொண்டிருந்தார். ‘இதுகளையெல்லாம் இவங்களுக்கு ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறாய்?’ - அருகிலிருந்த சிவசிதம்பரத்தின் மெதுவான குரல், ‘இயர்போனில்’ எங்கள் காதுகளில் கேட்டது. (நிச்சயமாக, தமிழ் பேச்சு மொழிபெயர்ப்பாளர்கள் அதனை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்த்திருக்கமாட்டார்கள்.)
அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சிவசிதம்பரம் மிகுந்த விரக்திகொண்டிருந்தார்.

அரசுடன் மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பிலான தொடர் ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை மாலைகளில் கொழும்பில் நடைபெற்றன. கூட்டம் முடிந்ததும், பொதுவாக அமிர்தலிங்கத்தை தொடர்புகொண்டே தகவல்களைப் பெறுவது வழக்கம். ஒருமுறை, கூட்டத்தை முடித்துக்கொண்டு அமிர்தலிங்கம் இரவு தபால் புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்கு கிளம்பிவிட்டார். சிவசிதம்பரத்துடன் தொடர்புகொண்டு விபரங்களைத் தெரிந்த பின்னர், யார்யார் இன்று கலந்துகொண்டீர்கள் என்று கேட்டபோது, ‘அதுதான் தம்பி, இந்த வழக்கமாக போகிற முட்டாள்கள்தான்’ என்று சொன்னார். இது வெளிப்படுத்தியவை அநந்தம்.
மாவட்ட அபிவிருத்தி சபைதான் அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு பெரும் சவாலாகியது. ஆனால், உண்மையில் அவரை அந்த சவாலுக்குள் தள்ளிவிட்டவர்கள், தாங்கள் ‘நல்லபிள்ளைகளானார்கள்’.
டட்லி சேனநாயக்க அரசாங்கத்தில் (1965 - 1970) சிவசிதம்பரம் துணை சபாநாயகராக பதவிவகித்தார். ஷேர்ளி கொரியா சபாநாயகர். ஜே. ஆர். அரசாங்கத்தில் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் சபாநாயகராகவிருந்தபோது, சிவசிதம்பரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் குறுக்கிட்டு, ‘நீங்களும் அந்த ஆற்றலில் சிறந்தவர்’ என்றார். உடனே சிவசிதம்பரம், ‘உங்கள் இடது கை பாராட்டுக்கு நன்றி’ என்றார்!
 

சிவசிதம்பரத்தின் சிம்ம குரலிலும் தோற்றத்திலும் ‘உடுப்பிட்டி சிங்கம்’ என்று அவர் அழைக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி 77 தேர்தலில் போட்டியிட்டபோது, 1970 தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற  தொகுதிகளை அவ்வக் கட்சிக்கு வழங்குவது என்று, வேட்பாளர் நியமனத்துக்கு ஒரு ‘சூத்திரத்தை’க் கண்டதில், தமிழ் காங்கிரசின் நல்லூர் தொகுதி மு. சிவசிதம்பரத்துக்கு வழங்கப்பட்டது. 1970 தேர்தலில் தமிழ் காங்கிரசின் சி. அருளம்பலம் நல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று, பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டார்.
அமிர்தலிங்கமும் மு. சிவசிதம்பரமும் 1970 தேர்தலில் தோல்வியுற்றிருந்தனர். வட்டுக்கோட்டை தொகுதியில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்த தமிழ் காங்கிரசின் ஆ. தியாகராசாவும் பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தார். எனின், அத் தொகுதி தமிழ் காங்கிரசின் குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கப்பட்டது. குமார் பொன்னம்பலம் அதனை ஏற்க மறுத்து, தந்தையார் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் முன்னைய யாழ்ப்பாணம் தொகுதியைக் கோரினார். ஆனால், 1970 தேர்தலில் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை தோற்கடித்து, தமிழரசு கட்சியின் சி. எக்ஸ். மாட்டின் யாழ்ப்பாண தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். (குடியரசு அரசியலமைப்பை ஆதரித்ததில் மாட்டின் பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.) ஆக, ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழரசுக் கட்சிக்குரிய யாழ்ப்பாண தொகுதி வெ. யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது. மறைந்த எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் காங்கேசன்துiறை தொகுதியில் அமிர்தலிங்கம் போட்டியிட்டார்.
இலங்கை முழுவதிலும் அதி கூடிய பெரும்பான்மையைப் பெற்றவராக சிவசிதம்பரம் நல்லூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.
 

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள்தான். ஆனால், சிவசிதம்பரம் உயர்ந்த பண்பாளர். சிறப்பான குணாம்சங்கள் கொண்டவர். ‘பூவோடு வருவார், பொட்டோடு வருவார், வட்டுக்கோட்டை அக்கா’ என்று, அந் நாள்களில் தமிழ் காங்கிரஸ் மேடைகளில் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தைக் குறித்து காங்கிரஸ்காரர்கள் பேசுவதுண்டு. ஆனால், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தைப்பற்றி பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்க ஏதோ பேசிவிட்டதற்காக வெகுண்டெழுந்த சிவசிதம்பரம், அரசாங்கத்தையே பின்னர் வெட்கித் தலைகுனிய வைத்தார்.
 

இனத்துக்கு, காலத்தில் அவசியமாகிய ஓர் ஒற்றுமையை கடைசிவரை உணர்த்தி நின்றவர் எம். சிவா. அமிர்தலிங்கம் சுடப்பட்டவேளையிலும் அவருடன் அருகிருந்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அமைச்சர் காமினி திசாநாயக்க, மிகச் சிறந்த ஓர் இரங்கல் உரை ஆற்றினார். ‘பல்லாயிரம் மக்கள், இவர்கள் இருவரினதும் பேச்சைக் கேட்ட இந்த மைதானத்தில் நான் பேசுகிறேன்; அவர்கள் இன்று மௌனமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் இந்த மௌனம், அவர்கள் பேசியிருக்கக்கூடிய எல்லாவற்றையும்விட மேலாக கேட்கும்.’
யாருக்கு கேட்கிறதோ, ஆனால் அவர்களைத் தொடரும் அரசியல்வாதிகளுக்கு அது நிச்சயமாக  கேட்கவில்லை.
எம். சிவாவை பிற்காலங்களில் ஒருமுறை சென்னை, அடையாறில் பார்த்தேன். முதுமையில், கூடவே அவரது துணைவியாரும் அங்கு இருந்தார். ஆனால், அதன்பிறகு ஹவ்லொக் ரவுணில்  கூட்டணி அலுவலகத்திலேயே ஒரு சிறு அறையில் அவர் வதிந்தார். ‘இரவுக்கு என்ன சாப்பாடு வாங்குவோம்.....?’ - அங்கிருந்தவரை அவர் கேட்டது, கேட்பதற்கு கஷ்டமாகவிருந்தது.
ஆனந்தசங்கரி அவரை பரிவோடு கவனித்தார்.
ஆக, சுதந்திரத்துக்குப் பின்னர், மக்கள் ஆளுமைபெற்ற தமிழ் அரசியல் தலைவர்களில் கடைசியானவர் எம். சிவசிதம்பரம். அவருடைய 19ஆவது நினைவுதினம் ஜூன் 5ஆம் திகதி வந்துபோனது.
- மாலி
‘ஈழநாடு’ - 13.06.2021

கருத்துகள் இல்லை: