வெள்ளி, 18 ஜூன், 2021

டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..! மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..

asianetnews.com : மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..! டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..!

ஸ்டாலின் பொன்னாடை போத்த அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மோடி, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மிகவும் நலம் என்று ஸ்டாலின் கூற, ஹவ் இஸ் யுவர் சிஸ்டர் என்று அடுத்த கேள்வியை கேட்க, ஸ்டாலின் கனிமொழி இஸ் பைன் என்று பதில் அளித்ததாக கூறுகிறார்கள்....முதலமைச்சராக பதவி ஏற்று சுமார் நாற்பது நாட்களுக்கு பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் மு.க.ஸ்டாலின். பொதுவாக முதலமைச்சராக பதவி ஏற்பவர்கள் முதல் வேலையாக டெல்லி சென்று பிரதமராக இருப்பவர்களை சந்திப்பது தான் மரபு. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற போது தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக வீசிக் கொண்டிருந்தது. இதனால் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க முடியவில்லை. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. 17ந் தேதி பிரதமர் மோடி நேரம் ஒதுக்கிய நிலையில் முதல் ஆளாக டெல்லி சென்றவர் கனிமொழி தான் என்கிறார்கள். அப்போது தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி மு.க.ஸ்டாலின் டெல்லி வருகைக்கான ஏற்பாடுகளை கனிமொழி தான் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்டார். அவர் வந்து கனிமொழியுடன் இணைந்து மு.க.ஸ்டாலினின் டெல்லி நிகழ்ச்சிகளை திட்டமிடலாகினார்.


இதனிடையே மாநிலங்களில் இருந்து டெல்லி வரும் முதலமைச்சர்கள் பிரதமரை சந்தித்தால் அதற்கென சில புரட்டகால்கள் உண்டு. அதனை முறைப்படி கேட்டுப் பெற வேண்டியது அந்தந்த மாநில அதிகாரிகளின் கடமை. ஆனால் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து எடப்பாடி முதலமைச்சரான பிறகு அந்த புரட்டகால்கள் குறித்து பெரிதாக அதிகாரிகள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கலைஞரோடு டெல்லி வந்த அனுபவத்தில் கனிமொழி அந்த பழைய புரட்டகால்களை எல்லாம் சரியாக செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன் படி தான் டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் மு.க.ஸ்டாலின் பயணிக்க பிரதமர் அலுவலகம் சார்பில் புல்லட் புரூஃப் காரும் கொடுக்கப்பட்டது. இதனிடையே டெல்லி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன் பிறகு தமிழ்நாடு இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு முதலமைச்சருடன் அனுமதிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் கனிமொழி என்கிறார்கள். இதனிடையே டெல்லியில் முன்னதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு அறையில் வந்து தங்கிய ஸ்டாலினை டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகள் பலர் வந்து சந்தித்துச் சென்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள், திமுக முக்கிய பிரமுகர்கள், எம்பிக்கள் போன்றோரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதனிடையே மாலை நான்கு ஐம்பது மணி அளவில் ஸ்டாலின் பிரதமர் இல்லம் புறப்பட்டார். அவருடன் தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மட்டுமே உடன் சென்றனர். முதலில் மு.க.ஸ்டாலின் மட்டும்  தனியாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது ஸ்டாலின் பொன்னாடை போத்த அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மோடி, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மிகவும் நலம் என்று ஸ்டாலின் கூற, ஹவ் இஸ் யுவர் சிஸ்டர் என்று அடுத்த கேள்வியை கேட்க, ஸ்டாலின் கனிமொழி இஸ் பைன் என்று பதில் அளித்ததாக கூறுகிறார்கள்.

சந்திப்பிற்கு பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின் அங்கிருந்த  கனிமொழியுடன் பிரதமர் உன்னை பற்றி விசாரித்ததாக கூற, அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பிரதமர் மோடி, ஸ்டாலினிடம் கனிமொழியை பற்றி விசாரித்தது குறித்து தான் திமுக உயர்மட்ட தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: