திங்கள், 14 ஜூன், 2021

கெளதம் அதானி? 5.6 லட்சம் கோடி ரூபாயுடன் ஆசியாவின் 2ஆவது பெரிய பண முதலையானது எப்படி? அம்பானியை முந்துவாரா?

கெளதம் அதானி

கெளதமன் முராரி  -      பிபிசி தமிழுக்காக  :   நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடு, சாத்தியமானால் ஒரு கார். ஓய்வு காலத்துக்கு ஒரு சில கோடிகள், குடும்பம், குழந்தை குட்டி, ஐஐடி, ஐஐஎம் இது தான் ஒரு இந்திய சாமானியனின் எண்ண ஓட்டங்கள்.
குறிப்பாக இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களுக்கு இது ஒரு லட்சியப் பயணம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அஹமதாபாத்தில் ஜவுளித் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கெளதம் சாந்திலால் அதானிக்கு மேலே குறிப்பிட்ட எதுவும் விருப்பப் பட்டியலில் இல்லை.
கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வியாபாரம் செய்ய புறப்பட்டவர், இன்று உலகின் டாப் 15 பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் என்கிறது ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடு.


ஜூன் 8ஆம் தேதி நிலவரப்படி கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 77.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்கிறது ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீடு. ஆசியாவிலேயே முகேஷ் அம்பானிக்குப் பிறகு இரண்டாவது பெரிய பணக்காரர் கெளதம் அதானிதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமாராக 72.80 ரூபாயாக இருக்கிறது. எனவே கெளதம் அதானியின் சொத்து மதிப்பை இந்திய ரூபாய்க்கு கணக்கிட்டால் சுமார் 5.66 லட்சம் கோடி ரூபாய் வரும்.

ஒருவேளை, கெளதம் அதானி தன் சொத்து பத்துக்களை எல்லாம் தானமாக கொடுத்தால் 130 கோடி பேருக்கு தலா 4,353 ரூபாய் கொடுக்க முடியும். அத்தனை பெரிய பணக்காரர். இன்று வரை தன் வணிக சாம்ராஜ்யத்தை குஜராத்திலிருந்தே நிர்வகித்து வரும் 58 வயதான கெளதம் அதானியின் பில்லியனர் அத்தியாயம் எப்படித் தொடங்கியது?
தொடக்க காலம் முதல் விரிவாக்கங்கள் வரை

1980களிலேயே கல்லூரிப் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, சொந்த ஊரான அகமதாபாத்தை விட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரத்தில் இறங்கினார். 1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க மீண்டும் குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கி தன் தொழிலதிபர் கனவுக் கோட்டைக்கு அடித்தளமிட்டார் அதானி. அந்த நிறுவனத்தின் பெயர் தான் அதானி என்டர்பிரைசஸ்.

தாராளமயத்துக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியை பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்கள், சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனக் கடைகள், ஹைதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், மும்பையில் முளைத்திருக்கும் பெரு நிறுவன கட்டடங்கள், தொழிற்சாலைகள், பீட்சா ஹட், டாமினோஸ், மெக்டொனால்ட்ஸ், மல்டி ப்ளக்ஸ், ஐபோன், பென்ஸ் கார்... என பல இடங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் பலரும் குஜராத்தின் நீண்ட நெடிய கடற்கரைகளையும், அதன் துறைமுகங்களையும் பார்த்திருக்கமாட்டோம். அலைகள் ஆர்பரிக்கும் அரபிக் கடலோரத்தில் இருக்கும் அந்த துறைமுகங்களில் இருந்து தான் 'அதானி' என்கிற பில்லியனரின் கதை தொடங்குகிறது என்கிறார் 'தி பில்லியனர் ராஜ்: எ ஜர்னி த்ரூ இண்டியாஸ் நியூ கில்டட் ஏஜ்' புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் க்ராப்ட்ரீ. இவர் ஃபைனான்ஷியல் டைம்ஸ் என்கிற சர்வதேச நிதி பத்திரிகையில் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.

மேலும் "குஜராத் மாநிலத்தின் வணிகம் என்பது ஒரு தனி மனிதனின் அபரிமித வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. அவர்தான் கெளதம் அதானி. இந்தியாவின் புதிய தலைமுறை தொழிலதிபர்களில் இவர் மிகவும் அதிரடியாக வியாபாரம் செய்யக்கூடியவர்" என குறிப்பிடுகிறார் ஜேம்ஸ் க்ராப்ட்ரீ.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடங்கிய கெளதம், அதன் பிறகு தன் வாழ்கையில் எதற்காகவும், யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. 1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்தை பட்டியலிட்டார்.

1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார். 2000-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.

அதன் பிறகு மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர்... என கிடைத்த வியாபாரங்களில் எல்லாம் கால் பதித்தார்.

அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு நிறுவனங்களை மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது. முதன் முதலில் பட்டியலிட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை கடந்த 1994-ல் 150 ரூபாயாக இருந்தது, கடந்த மார்ச் 2020 நிலவரப்படி 75,000 ரூபாயாக இருக்கிறது என அதானி குழுமம் தன் 2019 - 20 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இத்தனை வியாபாரங்கள் செய்தாலும் இன்று வரை அதானி சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது அவரது துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Adani Ports and SEZs) வியாபாரம் தான் என்கிறார் ஜேம்ஸ் க்ராப்ட்ரீ.

இதை ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் ஏ கே பிரபாகரும் ஆமோதிக்கிறார். இந்த துறைமுகங்களைச் சார்ந்தே, மின்சாரம், மின் பகிர்மானம், ரயில்வே, சரக்குப் போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்கள்... என பல நிறுவனங்களைத் தொடங்கி அதானி குழுமம் தன் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தியதாக கூறுகிறார் அவர்.

கெளதம் அதானியை பில்லியனராக உலகம் அறிந்து கொள்வதற்கு முன்பு, அவர் 1997ஆம் ஆண்டு சிலரால் அகமதாபாத் புறநகரில் வைத்து கடத்தப்பட்டார். சுமார் ஒரு நாள் கடத்தி வைத்திருந்தவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கெளதமை திருப்பி அனுப்பியதாக பல்வேறு செய்திகளைக் காண முடிகிறது. ஜேம்ஸ் க்ராப்ட்ரீயும் தன் பில்லியனர் ராஜ் புத்தகத்தில் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

அதே போல 2008ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் போது, அவ்விடுதியில் சிக்கி இருந்த பல விருந்தினர்களில் கெளதம் அதானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பலவீனமான கட்டமைப்பை நம்பி தொழில் செய்ய விரும்பாத அதானி, தனக்கென தனியே ரயில்வே லைன்களை அமைத்துக் கொண்டார். தனி மின் நிலையங்களையும் அமைத்துக் கொண்டார்.

இந்தியாவிலேயே சுமார் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானிதான் என அவர்களின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாதைகள், தங்களின் துறைமுகம், சுரங்கங்கள் மற்றும் வியாபார சந்திப்புகளுக்கு இடையில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க உதவுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே போல இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமும் அதானி குழுமம்தான். குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் இந்நிறுவனம் 12,450 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளதாக அதானி பவர் நிறுவனம் தன் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தை வைத்திருந்தால் மட்டும் போதுமா? அதற்கான எரிபொருள் வேண்டுமல்லவா... அதற்காக இந்தோனீசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களை நடத்தி வருகிறார் அதானி.

ஹென்றி ஃபோர்ட் எப்படி பிரேசிலில் ரப்பர் தோட்டத்தை வாங்கி தன் கார்களுக்குத் தேவையான ரப்பர் தேவையை பூர்த்தி செய்து கொண்டாரோ, அப்படி ஒரு ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை கெளதம் அதானி உருவாக்கிக் கொண்டார் என ஒரு செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.

முந்த்ராவுக்குப் பிறகு அதானி, இந்தியாவில் மேலும் ஆறு துறைமுகங்களை வாங்கினார் அல்லது கட்டமைத்தார். அது அவரை இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளியாக்கி இருக்கிறது.

"இந்தியாவில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கில் சுமார் 25 சதவீதத்தை அதானி குழும நிறுவனங்கள் கவனித்துக் கொள்வதாகவும், இந்த அளவு வருங்காலத்தில் அதிகரிக்கலாம்" எனவும் ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் ஏ கே பிரபாகர் கூறுகிறார்.

மேலும் உலக அளவில் சரக்கை அதிவேகமாக கையாளும் உயர்மட்ட நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

சில தசாப்தங்களுக்கு முன் தொடங்கிய அதானியின் அனல் மின்சார நிலையங்கள், தற்போது இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

மின்சாரம் என வந்த பிறகு சூரிய ஆற்றலையும் அதானி விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் நம்பர் 1 என தன் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தான், 2500 ஏக்கர் நில பரப்பில், உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறார் கெளதம் அதானி.

இந்தியாவில் பாக்கெட் எண்ணெய் வியாபாரத்தில் அதானியின் வில்மர் ஒட்டுமொத்த சந்தையில் 20 சதவீதத்தை தன் கையில் வைத்திருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை ஒரு செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது.

அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஜூன் 11ஆம் தேதி நிலவரப்படி சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில், ஆறில் ஐந்து நிறுவனங்கள் இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களில் இடம்பிடித்திருக்கின்றன என்றால் இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

வியாபாரத்திலும் தொழிலிலும் இவ்வளவு உயரத்தை எட்டிய கெளதம் அதானி கூச்ச சுபாவமுடையவர். ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லை. தன் சக போட்டியாளர்களைப் போல அதிகம் ஊடகத்தின் முன் தோன்றி பகிரங்கமாகவோ, பெரிய ஆளுமையுடனோ பேசக்கூடியவர் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கின்ற போதிலும் தன் தொழில்சார் கூட்டங்களை முகேஷ் அம்பானியைப் போல பொது வெளியில் பகிரங்கமாக நடத்தி கவனத்தை ஈர்க்கக் கூடியவர் அல்ல. ஸ்டீவ் ஜாப்ஸைப் போல தன் சேவை குறித்தோ, தான் உற்பத்தி செய்யும் பொருள்கள் குறித்தோ மக்களிடம் நேரடியாக உரையாடக் கூடியவர் அல்ல. தான் சந்தித்தே ஆக வேண்டும் என்பவரை மட்டுமே சந்திப்பவர்.

டாடா, பிர்லா, அம்பானி போல கெளதம் அதானி பரம்பரை பணக்காரரா? இல்லை. ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், செர்கி பிரைனின் கூகுள் போல புதிதாக பெரிதாக எதையாவது கண்டு பிடித்தாரா? இல்லை. நூற்றாண்டு காலமாக வியாபாரம் செய்கிறாரோ? அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியதே 1988-ல் தானே. பிறகு எப்படி இத்தனை குறுகிய காலகட்டத்தில் பெரிய பணக்காரரானார்?
கெளதம் அதானி - நரேந்திர மோதி நட்பு

நிலம், இயற்கை வளங்கள், அரசு ஒப்பந்தங்கள் அல்லது உரிமங்கள்தான் இந்திய பில்லியனர்கள் பலரின் பெரிய வருவாய் மூலங்களாக இருக்கின்றன என இந்தியாவின் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கூட்டத்தில் கூறினார். அதற்கு ரிசோர்ஸ் ராஜ் எனவும் பெயரிட்டார் அவர். ரகுராம் ராஜன் அன்று குறிப்பிட்டது, இன்றும் அதானி விஷயத்தில் பெரிதும் பொருந்திப் போகிறது.

"இந்தியாவின் புதிய பில்லியனர்களில் ஒருவரான கெளதம் அதானி, அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோதியுடன் நெருக்கமான நட்பில் இருந்தார்." "2001ல் நரேந்திர மோதி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கியன" என பில்லியனர் ராஜ் புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார் ஜேம்ஸ் கிராப்ட்ரீ.

மோதியின் வியாபார ஆதரவுக் கொள்கைகள் அதானியின் வியாபார விரிவாக்கத்துக்கு உதவின. அதானியின் பல்வேறு வியாபார விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் மோதியின் குஜராத் மாடலின் வெற்றிக் குறியீடாக காட்டப்பட்டன.

இதற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தையே எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். நரேந்திர மோதியுடனான நெருக்கம் கெளதம் அதானிக்கு அரசு தரப்பிலிருந்து போதிய உதவிகள் கிடைக்க வழி செய்தன, முந்த்ரா துறைமுகத்தின் வளர்ச்சி மோதியின் குஜராத் மாடலின் வெற்றியாக கொண்டாடப்பட்டது.

சமீபத்தில், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை இதன் நீட்சியாகக் காணலாம்.
ஒற்றுமைகள்

"நரேந்திர மோதிக்கும், கெளதம் அதானிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் துறையில் பெரிய பின்புலம் இல்லாமல் வளர்ந்தவர்கள். இருவரும் அதிகம் படித்தவர்கள் கிடையாது. ஆங்கிலத்தில் பெரிய புலமையோ பாண்டித்தியமோ கிடையாது, தங்கள் பிரைவசியில் அதிகம் கவனம் கொண்டவர்கள், பத்திரிகையாளர்களைச் சந்திக்காதவர்கள்," என்கிறார் ஜேம்ஸ் க்ராப்ட்ரீ.

நரேந்திர மோதி - கெளதம் அதானி நட்பு எந்த அளவுக்கு ஆழமானது என்றால், 2002 கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மத வன்முறைக்குப் பிறகு, அதானி மோதிக்கு ஆதரவாகப் பேசி தன் விசுவாசத்தைக் காட்டினார் என்கிறார் க்ராப்ட்ரீ.
அதானியின் விமானத்தில் பிரசாரம்

2014-ல் பொதுத் தேர்தலுக்காக சுமார் 150 பிரசார கூட்டங்களில் மோதி கலந்து கொண்டதாகவும், கிட்டத்தட்ட 2.4 லட்சம் கிலோமீட்டர் பயணித்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறது.

அப்பிரசார கூட்டங்களுக்கு, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி, கர்னாவதி ஏவியேஷன் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான EMB-135BJ Embraer விமானத்தில் பயணித்தார் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியானது.

இந்த நிறுவனம் அதானி குழுமத்துக்குச் சொந்தமானது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதே இதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தன. அதானி மற்றும் மோதிக்கு இடையிலான உறவையும் குறிப்பிட்டு கண்டித்தன.

இதில் வேடிக்கை என்னவென்றால், 2014ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில், காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சாதகமாக இருப்பவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் உரிமங்கள் வழங்கப்பட்டதாக கூறி கூட்டாளி முதலாளியத்தை எதிர்த்தும் தேர்தல் பிரசாரங்களில் பேசினார் நரேந்திர மோதி.
1 பில்லியன் டாலர் கடன்

அதானி போர்ட்ஸ் & எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு குஜராத்தின் ஆயிரக் கணக்கான ஹெக்டேர் நிலங்கள் குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதை அந்நிறுவனம் அதிக விலைக்கு மற்றொருவருக்கு குத்தகைக்கு கொடுத்ததாக சர்ச்சைகள் எழுந்தன.

தேர்தல் எல்லாம் முடிந்து 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமரான பின், இந்திய பிரதமர் என்கிற முறையில் பிரிஸ்பன் நகரத்தில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவரோடு கெளதம் அதானியும் சென்றார்.

ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது. அதையும் ஜி20 பயணத்தின் போதே அறிவித்தார் கெளதம் அதானி.

இத்தனைக்கும் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அப்போது ஆஸ்திரேலியாவின் பல சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாக வலியுறுத்தின.
‘சாதகமாக நடந்து கொண்டார்’
தணிக்கை

2012ஆம் ஆண்டில், அரசு நிறுவனத்தில் இருந்து குறைந்த விலைக்கு, அதானி நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதாக, நரேந்திர மோதி அரசை குற்றம்சாட்டி அறிக்கை அளித்தார் அரசுத் தணிக்கையாளர் ஒருவர்.

அதானி குழுமம் முறையாக சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் முந்த்ராவில் உள்ள தன் சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்வதாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. திடீரென 2014ஆம் ஆண்டு அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட் எல்லா அனுமதிகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சீன கம்யூனிஸ்ட் தலைவர் டெங் சியாவோபிங் 1980-களில் சீனாவில் வணிகத்துக்கு சாதகமான 'சிறப்பு மண்டலங்கள்' என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 2000ஆம் ஆண்டுகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் லாபகரமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நன்றாக செயல்பட்டன. அதற்கு அதானியின் நல்ல நிர்வாகம் ஒரு காரணம் என்றாலும், அதானிக்கு நிலவும் சாதகமான சூழலே முக்கியக் காரணம் என சுட்டிக் காட்டினார் ராகுல் காந்தி.

குஜராத் மாநில அரசிடமிருந்து அதானி தனக்கு சாதகமான விலையில் நிலங்களை கைப்பற்றியதாக கூறினார் ராகுல் காந்தி.

அதானியின் வளர்ச்சி, இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவரான பரன் ஜோய் குஹா தாகுர்தாவின் கவனத்தை ஈர்த்தது. 'கேஸ் வார்ஸ்: க்ரோனி கேப்பிட்டலிசம் அண்ட் தி அம்பானிஸ்' என்கிற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இவர். முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி குறித்து நிறைய எழுதியிருக்கிறார்.

2016ஆம் ஆண்டு 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு, அதானியின் அசகாய வளர்ச்சி எப்படி சாத்தியமானது என தோண்டித் துருவி எழுதத் தொடங்கினார்.

அரசின் கொள்கைகள் அதானிக்கு சாதகமாக இருந்தது குறித்தும், அதானி குழுமத்தின் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் தொடர்ந்து எழுதினார். அதை எதிர்த்து அதானி குழுமம் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்தது. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகை, பரன் ஜோய் குஹாவின் கட்டுரையை வலைதளத்திலிருந்து நீக்கியது.

அது பரன் ஜோய் குஹா பதவி விலக வழி வகுத்தது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தலைமையில் பல்வேறு கல்வியாளர்களும் இச்சம்பவத்தை எதிர்த்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன் வியாபாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் கெளதம் அதானி.

இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை வரலாறு காணாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதாக கூறுகிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி. அவ்வார்த்தைகள் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதானி அம்பானி போன்ற இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிகரிக்கின்றன. ஆனால் இந்திய சாமானியர்களுக்கோ எதிர்காலம் சூனியமாக இருக்கிறது.

சரி... கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் டாப் இடங்களைப் பிடிக்காத கெளதம் அதானி, இந்த ஆண்டு மட்டும் திடீரென ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி?
அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஏற்றம்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி கடந்த மார்ச் 2016-ல் 3.5 பில்லியன் டாலராக இருந்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஏப்ரல் 2020-ல் 8.9 பில்லியன் டாலராக அதிகரித்தது. ஏப்ரல் 2021-ல் 50.5 பில்லியன் டாலராகவும், ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் கணக்குப் படி கடந்த ஜூன் 8ம் தேதி 77.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்திருக்கிறது.

அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஏற்றம்தான் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்வுக்குக் காரணம் என பிபிசி தமிழிடம் கூறுகிறார் ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் ஏ கே பிரபாகர்.

"கடந்த ஓராண்டு காலத்தில் அதானி குழும பங்குகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் சகட்டு மேனிக்கு அதிகரித்திருக்கிறது." என்கிறார்.

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருக்கும் மொத்த பங்குகளில், அதானி க்ரீன் எனர்ஜி 1.91 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் (ஜூன் 11 நிலவரம்), இந்தியாவின் 21ஆவது பெரிய நிறுவனம் என்கிற புதிய உச்சத்தைப் பிடித்திருக்கிறது. சொல்லப் போனால் அதானி குழும நிறுவனங்களிலேயே அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம்தான் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்றம் நிலைக்குமா? தொடருமா?

"பொதுவாக பங்குச் சந்தையில் நன்றாக லாபம் ஈட்டக் கூடிய நிறுவனங்களுக்கு அதிக விலை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 16,854 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இதுவரை அதிலிருந்து லாபம் சம்பாதிக்கவில்லை. அப்படி ஒரு நிறுவனத்துக்கு தோராயமாக ஒரு பங்குக்கு 1,200 ரூபாய் என்கிற பெரிய விலை கொடுப்பது அத்தனை சரியல்ல.

2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் இந்திய பங்குச் சந்தை சரிவுகளை இன்னும் மறந்திருக்கமாட்டோம் என நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் அனில் அம்பானியின் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அவரது நிலை என்ன? அனில் அம்பானிக்குச் சொந்தமான, ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேப்பிட்டல் என பல பங்குகளின் விலையும் தரை தட்டிவிட்டன."

"அனில் அம்பானியின் நிறுவனங்களைப் போல இல்லை என்றாலும், அதானி குழும நிறுவன பங்குகளும் ஒரு பெரிய விலை சரிவை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் தங்கள் வியாபாரங்களை சிறப்பாகச் செய்து வருவதால், அவ்விரு நிறுவனங்களும் நிலைத்து நிற்க அதிக வாய்ப்பிருக்கிறது. மற்ற நிறுவனங்களைக் குறித்து எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது" என்கிறார் பிரபாகர்.

முகேஷ் அம்பானியை கெளதம் அதானி முந்துவாரா?
"வெறுமனே பங்குச் சந்தை மதிப்பில் அம்பானியை தற்காலிகமாக முந்துவது எல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல, நீண்ட காலத்துக்கு பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் குழுமத்தை அதானி குழுமம் முந்துகிறதா? வியாபாரத்தில் ஈட்டும் வருவாயில் அவரை முந்துகிறாரா என்பது தான் முக்கியம். தற்போது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் கெளதம் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து இருக்கிறது. நீண்ட காலத்துக்கு இது நிலைத்து நிற்குமா என்பது சந்தேகமே.

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த மார்ச் 2021 விற்பனை வருவாய் 2.5 லட்சம் கோடி ரூபாயைக்கூட தாண்டாது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருவாய் அதே மார்ச் 2021-ல் சுமார் 4.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஒருவேளை கச்சா எண்ணெய் விலை நன்றாக இருந்திருந்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்பனை வருவாய் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கும்.

ஆக கெளதம் அதானி, முகேஷ் அம்பானியை வியாபார ரீதியாக முந்துவது அத்தனை எளிதான காரியமல்ல" என்கிறார் பிரபாகர்.

அதானி தன் புதிய நிறுவனங்களை நிலைநிறுத்திக் கொள்வாரா? முகேஷ் அம்பானியை முந்தும் அளவுக்கு வருவாய், லாபம் எல்லாம் பார்ப்பாரா? இன்னும் என்ன மாதிரியான புதிய வியாபாரங்களில் எல்லாம் கால் பதிக்கப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: