வெள்ளி, 18 ஜூன், 2021

இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் (கறுப்புப்?) பணம் 6,625 கோடியில் இருந்து 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாவாக பாய்ச்சல்

 தினமலர் :புதுடில்லி : கடந்த இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்த வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள நிதிகள் குறித்த தகவல்களும் கிடைத்து உள்ளன.


இதில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில், 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இந்த அறிக்கைவாயிலாக தெரிய வந்துள்ளது. இது 2019ம் ஆண்டு இறுதியில் 6,625 கோடியாக இருந்தது. இந்த, 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாயில், 4,000 கோடி ரூபாய், வாடிக்கையாளர்களின், 'டிபாசிட்' தொகை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றவை நிதிப் பத்திரங்கள் மூலமாக வைக்கப்பட்டுள்ள சேமிப்புகளாகும். கடந்த 13 ஆண்டுகளில் இது தான் அதிகப்பட்ச அளவாகும். அதேசமயம் 2 ஆண்டுகளாக குறைந்து வந்த முதலீடு, தற்போது அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த விஷயம் வெளியானது முதலே சமூகவலைதளமான டுவிட்டரில் #Swiss, #Rs 20,700 ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதுதொடர்பாக சிலர் பகிர்ந்து கருத்துக்கள் இங்கே...

* கறுப்பு பணத்தை ஒழிப்போம், கறுப்பு பணத்தை மீட்டு வருவோம் என கூறியவர்கள் எங்கே. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. என்ன செய்யபோகிறது மத்திய அரசு.

* என்ன ஒரு முன்னேற்றம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. கறுப்பு பணம் உயர்ந்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணம் இந்தியாவிற்கு வரவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து மட்டும் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பணம் சென்று கொண்டு இருக்கிறது.

* மகிழ்ச்சியான செய்தி. இப்போது ஒவ்வொரு இந்தியரும் 15 லட்சத்திற்கு பதிலாக 45 லட்சம் பெறலாம். இன்னும் காத்திருந்தால் இந்த தொகை இன்னும் 10 மடங்களாக பெருகும்.

*கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்றார்கள். ஆனால் இங்கு ரிவர்ஸில் செல்கிறது. சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 20,700 கோடியாக உயர்ந்ததற்கு காரணம் மோடியின் பணமதிப்பிழப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.

* மக்களே யாரும் இதை எண்ணி வருத்தப்பட வேண்டாம். இந்த பணம் இன்னும் பெருகட்டும். அப்போது தான் மோடி சொன்னது போன்று ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் 15 லட்சம் பணம் கிடைக்கும்.

இப்படியாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: