புதன், 17 மார்ச், 2021

`அ.தி.மு.க அணி கரை சேருவது கடினம்”- டெல்லிக்கு ஓலை அனுப்பியதா பா.ஜ.க. தலைமை?

அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை
vikatan.com - அ.சையது அபுதாஹிர் : அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை! கூட்டணியை பலப்படுத்தவேண்டி அ.தி.மு.க இந்த முறையும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற அதீத  நம்பிக்கையில் கூட்டணிக்கட்சிகளை  சரியாக கையாளவி்ல்லை .“அ.தி.மு.க அணி வரும் சட்டமன்ற தேர்தலில் கரைசேர்வது கடினம். நமது வேட்பாளர்களின் வெற்றியும் எளிதல்ல” என்று தமிழக பாஜக தரப்பிலிருந்து டெல்லிக்கு தகவல் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க அணியில் பா.ம.க, பா.ஜ.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இஸ்லாமிய கட்சிகளும் களத்தில் நிற்கிறன. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியே தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில் தி.மு.க இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் ஒரே அணியாக தேர்தல் களத்தில் நிற்பது தி.மு.க அணிக்கு அச்சத்தையும் கொடுத்துள்ளது.

அ.தி.மு.க அணியில் உள்ள பா.ஜ.க கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களாக, தனித்தே போட்டியிட்டு வந்தது. இதனால் 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அந்தக் கட்சியால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகித்து 20 இடங்களைப் பெற்றுள்ளது.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இந்நிலையில் வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க தலைமையிடம் டெல்லி மேலிடம் கருத்துக்கேட்டுள்ளது. தமிழக பா.ஜ.க தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விவரங்களில் அ.தி.மு.க வின் வீழ்ச்சியைப் பற்றி சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

``இந்த ஆண்டு துவக்கதிலிருந்து எடப்பாடியின் செயல்பாடுகள் நல்லமுறையில் பேசப்பட்டன. ஆனால், சமீப நாட்களாக அ.தி.மு.க வின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிந்துவருவதை அறியமுடிகிறது. வன்னியர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுத்ததை பிற சமூகத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் மத்தியில் இந்த விவகாரம் நெகட்டிவ்வாக உள்ளது. அதே போல் அ.ம.மு.க தனித்து நிற்பதையும் நாம் அனுமதித்திருக்க கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

``அ.தி.மு.க இந்த முறையும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற அதீத நம்பிக்கையில் கூட்டணிக்கட்சிகளை சரியாக கையாளவி்ல்லை. குறிப்பாக அ.ம.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க போனதும் நமது அணிக்கு பலவீனமாகியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு போதுமான வாக்கு விகிதங்கள் இருக்காது; இருபது இடங்களில் நாம் போட்டியிட்டாலும், ஐந்து இடங்களில் வெற்றி பெறுவதே அதிகம். தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டத்தை நாமும் மாநில அரசும் இணைந்து கொண்டுவந்தோம். ஆனால் அதற்கான பலன் இந்த தேர்தலில் நமது அணிக்கு கிடைப்பது சந்தேகம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தினகரன் - பிரேமலதா விஜயகாந்த்
தினகரன் - பிரேமலதா விஜயகாந்த்

“அ.தி.மு.க மீதுள்ள எதிர்மறை கருது்துகளால் நாமும் சேர்ந்தே பாதிக்கப்படுவோம். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நம்மையும் அனுமதித்திருந்தால் தே.மு.தி.க நம் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும். அ.தி.மு.க தரப்பு நம்மை எந்த பேச்சுவார்த்தையிலுமே அழைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்களாம். இந்த தகவல் அ.தி.மு.க வட்டாரத்திற்கும் தெரிந்துள்ளது. சமீபத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது ``நாம் மீண்டும் ஆட்சியைப்பிடிப்போம் என்கிற நம்பிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. நமது தொண்டர்களிடமும் அந்த உற்சாகம் இல்லை” என்று பேசியிருக்கிறார். அ.தி.முக-வின் கடைசி நேர யுக்திகள் கைகொடுக்காமல் போனால் பாஜக-வின் பாய்ச்சல் அ.தி.மு.க மீது அதிகம் இருக்கும் என்கிறார்கள் பாஜகவினர்.

கருத்துகள் இல்லை: