சனி, 20 மார்ச், 2021

LR Jagadheesan : · அறிவுஜீவிகளல்ல; ஐந்தாம் படைகள்!

May be an image of 1 person and standing
LR Jagadheesan : · அறிவுஜீவிகளல்ல; ஐந்தாம் படைகள்!   
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தல்;
இங்கே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது அதிமுக கட்சி. எனவே நடக்கும் தேர்தல் என்பது இன்றைய அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவேண்டுமா அல்லது இந்த ஆட்சி இத்தோடு முடியவேண்டுமா என்பதற்கான தேர்தல்.
அதாவது தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் முடிவு செய்யவேண்டியது அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடரவேண்டுமா?
இத்தோடு முடியவேண்டுமா? என்பதைப்பற்றித்தான்.
இது மட்டுமே இந்த தேர்தலின் முதன்மையான கேள்வி. ஒரே கேள்வி.
அதை முடிவு செய்வதே இந்த தேர்தலின் ஒரே நோக்கம். இலக்கு. தேவை.
எனவே ஒன்று நீங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
இல்லை இந்த அதிமுக ஆட்சி இத்தோடு முடியவேண்டும் என்று சொல்லுங்கள்.
இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே குறைந்தபட்ச அரசியல் தெளிவுக்கான அடையாளம்; அறிவுநாணயத்துக்கான அளவுகோள்.
அதைத்தாண்டின எந்தவிதமான வியாக்கியானங்களுக்கும் இந்த தேர்தலில் எந்த இடமும் கண்டிப்பாக இல்லை. இல்லை. இல்லவே இல்லை.
மூன்றாவது வழி இருப்பதாக சொல்வதும் இந்த தேர்தலில் மாற்று அரசியலுக்கு முயல்வோம் என்பதும் உண்மையில் மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
காரணம் 2016 சட்டமன்றத்தேர்தலில் இப்படியான மூன்றாவது வழி என்றும் மாற்று அரசியல் முயற்சி என்றும் முயன்றதால் தானே இன்றைக்கு தமிழ்நாடும் அதன் மக்களும் மாநில பொருளாதாரமும் முட்டுச்சந்தில் வந்து நின்றிருக்கிறது? 2016 முதல் 2021 வரை தமிழ்நாடு அடைந்த அத்தனை சீரழிவுகளுக்கும் முதன்மைக்காரணம் 2016 ஆண்டின் இந்த “மாற்று அரசியல் முயற்சி” என்கிற மண்ணாந்தைத்தனம் தானே?
கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு இழந்த உரிமைகள்; வரி வருவாய்; சமூகபொருளாதாரம் அடைந்திருக்கும் பின்னடைவுகள்; ஏழுகோடித்தமிழர்கள் இழந்த கல்வி/வேலைவாய்ப்புகள் இதையெல்லாம் நீதிமன்றங்களே வெளிப்படையாக காறித்துப்பிய பின்பும் மாற்று அரசியல் மண்ணாங்கட்டியை இந்த தேர்தலிலும் நீட்டி முழக்குபவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்? இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா?
எடப்பாடி ஆட்சி தொடரவேண்டும் என்று நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொன்னால் கேட்பவர்கள் பின் வாயால் சிரிப்பார்கள் என்கிற சங்கோஜம் தானே “மாற்று அரசியல்” என்கிற வாய்நீளம்? கைஜாலம்?
இதில் ஜனநாயகம் பொதுநலன் லொட்டு லொசுக்கு என்கிற வாய்ப்பந்தல் எதற்கு?
ஒட்டுமொத்த உலகமும் உற்றுப்பார்த்த ஜனநாயகத்தேர்தல் ஒன்று மிகச்சமீபத்தில் தான் ஆனப்பெரிய அமேரிக்காவில் அந்நாட்டு அதிபரை தேர்ந்தெடுக்க நடந்து முடிந்தது.
அதில் அதிபர் ட்றம்ப்புக்கு எதிரான ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அந்த கட்சிக்குள் தேர்தல் நடத்தி பொதுவெளியில் அதற்கான வாக்கெடுப்பும் நடந்தது. அதில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தகுதிகளை பட்டியலிட்டதோடு தங்களை எதிர்ப்பவர்களின் தகுதியின்மையையும் புட்டுப்புட்டு வைத்தார்கள். பொது வெளியில். ஒரே கட்சிக்காரர்கள் தான். ஆனால் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடப்போவது யார் என்கிற போட்டியில் அவர்களுக்குள் குடுமிபிடி சண்டை. தொலைக்காட்சி நேரலைகள் வாயிலாக. ஒருவழியாக இறுதியில் பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வானதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அத்தனைபேரும் ஒரே அணியில் திரண்டார்கள். ஒரே குரலில் பைடனே அதிபராக வேண்டும் என்று முழங்கினார்கள்.
ஜனநாயக கட்சிக்காரார்கள் மட்டும் அப்படி மாறவில்லை. ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுவெளியில் மூர்க்கமாக செயற்பட்ட அவர்களின் கட்சிக்கு வெளியிலான ஆதரவாளர்களும் அறிவுஜீவிகளும் அதே போல் ஒரே குரலில் பைடனுக்கான தங்கள் ஆதரவை பொதுவில் சொன்னார்கள். இயங்கினார்கள். பைடனை இறுதியில் வெல்லவும் வைத்தார்கள்.
என்ன காரணம்? மேற்குலக அரசியலில்; அறிவுதளத்தில் இன்னமும் அறிவுநாணயம் மிச்சம் இருக்கிறது. முற்றாக அழிந்துவிடவில்லை. மேற்குலக அரசியல் அப்பழுக்கற்றது என்பதோ அதுவே சரி என்பதோ அல்ல என் வாதம். இன்னும் மேற்குலக ஜனநாயகத்தில் அறிவுநாணயம் கொஞ்சமேனும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை சுட்டவே இந்த உதாரணம்.
நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல்களில் இறுதித்தேர்வு என்பது யார் அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யவேண்டும் என்பதை தேர்வு செய்வது மட்டுமே என்பதை மேற்குலக நாடுகளின் கட்சிக்காரர்கள்/கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல கட்சிகளுக்கு வெளியில் இருக்கும் இயங்கும் ஆனப்பெரிய அறிவுஜீவிகளும் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அதனால் தேர்தலுக்குத்தேர்தல் தங்களின் ஆதரவு யாருக்கு? ஏன்? என்ன காரணங்கள்? என்பதிலும் தாங்கள் யாரை எதிர்க்கிறார்கள்? ஏன்? என்ன காரணங்கள் என்பதிலும் அவர்களில் பலர் தெளிவாக இருக்கிறார்கள். வெளியில் சொல்லவும் செய்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு இங்கே “கட்சிசாரா (?!) அறிவுஜீவிகளாக” வலம் வரும் அயோக்கியர்களிடம் அத்தகைய அறிவுநாணயம் என்பதே 99% பேரிடம் இல்லை. இவர்களிடம் குறைந்தபட்ச அறிவுநாணயம் என்பது மருந்துக்கு கூட இருந்ததே இல்லை.
ஏனென்றால் இவர்களில் 99% தங்களின் ஜாதி/மத/வர்க்க/பாலின சார்புநிலைகளுக்குள் நின்றபடியே பொதுவெளியில் அறிவுஜீவிகளாகவும் வலம் வருபவர்கள்.
இதில் மிகக்கணிசமானவர்கள் காசுக்கு தம்மையே விற்றுக்கொண்ட கைக்கூலிகள். கையில காசு வாயில தோசை ரகம். இவர்களுக்கு வாய் நிறைய உப்புக்கண்டமும் சுட்டுச்சாப்பிடவேண்டும். அது ஊருக்குள் யாருக்கும் தெரியவும் கூடாது. அதனால் “நாங்கள்ளாம் சுத்தசைவம்” என்று வெளியில் சொல்லிக்கொண்டே அவரவர் வீட்டு அடுப்பங்கரைக்குள் கமுக்கமாய் போய் உப்புக்கண்டத்தை சுட்டு சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள்.
மிச்சமுள்ள 1% “நட்டநடுவுநிலை அறிவுஜீவிகள்” சரியான பயந்தாங்கொள்ளிகள். சாப்பிட மட்டும் வாயைத்திறக்கும் பின்வாயை கழுவ மட்டும் கையை பயன்படுத்தும் உத்தமோத்தமர்கள். அழுக்கே படாத புனித ஆத்மாக்கள்.
அதனால் தான் இந்த நபர்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என்றோ அவை ஏன் இன்னும் ஐந்தாண்டுகாலம் தொடரவேண்டும் என்றோ பேசாமல் தவிர்ப்பார்கள்.
அறிவுநாணயமுள்ள அறிவுஜீவிகளானால் இவர்கள் கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகளை; நல்லவைகளை பட்டியல் இடட்டும். அதன் அடிப்படையில் அடுத்த ஐந்தாண்டுகாலம் அதிமுகவே தொடர்ந்தால் இன்னின்ன நல்லவை நடக்கும் என்பதை சொல்லட்டும். அதைவிட்டுவிட்டு மாற்று அரசியல் என்கிற மாய்மாலத்தை பேசுகிறார்கள் என்றால் இவர்கள் அறிவுஜீவிகளல்ல ஐந்தாம்படைகள் என்பதே உண்மை.
அதுவும் அமித்ஷாவிடம் தன் கட்சியையும் தன் மாநிலத்தையும் மொத்தமாய் அடகுவைத்த ஒரு எடுபிடியின் ஐந்தாம்படைகள் இவர்கள் என்பதே ஆனப்பெரிய கேவலமான உண்மை.

கருத்துகள் இல்லை: