சனி, 20 மார்ச், 2021

கமல் கட்சி பொருளாளர் சந்திரசேகரன் 80 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித்துறை தகவல்

Treasurer caught in IT raid ... Kamal explanation!

‘‘கமலை பிஜேபியின் ‘பி’ டீம் என்று பொதுவெளியில் பலரும் பேசிவருகிறார்கள். நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் இத்தனை மாநிலங்களில் ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு மதிப்பிலான பொருள்களை விநியோகம் செய்ய டெண்டரே இல்லாமல் ஆர்டர் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அரசியல் பின்புலம் கண்டிப்பாகத் தேவை. இவருடைய நண்பர் கார்த்திக் ஸ்ரீதர் என்பவர், சென்னையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மென்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

 மின்னம்பலம் : 2018 பிப்ரவரி 1 அன்று, மதுரை ஒத்தக்கடையில் கமல் கட்சி துவக்கியபோது, அவருடன் சேர்ந்தவர்களில் பலர் யாரும் அறியாதவர்கள். பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் ஆளுமையுமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, போலீஸ் அதிகாரி மவுரியாவைத் தவிர, வேறு யாரையும் அப்போது மக்களுக்குத் தெரியாது. துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன், மாணவர் நகலகம் செளரிராசன், நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கோவை தங்கவேலு போன்றோரும் அந்தந்தப் பகுதியிலும், ஒரு குறிப்பிட்ட வட்டத்திலும் மட்டுமே அறிமுகமானவர்கள். கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஒருவருக்கு ஒருவரே அறிமுகம் கிடையாது.

அப்போது கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக இருந்த சுகா. பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகன். என்ன காரணமென்றே தெரியாமல், கட்சி துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஞானசம்பந்தன், செளரிராசன், பாரதி கிருஷ்ணகுமார் என்று ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள ஆரம்பித்தார்கள். அடுத்த ஆண்டிலேயே சுகாவும் வெளியேற, திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன், கட்சியின் பொருளாளராகவும், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இப்போது வரையிலும் அந்தப் பதவியில் தொடர்ந்து கொண்டிருப்பவர், அவர்தான். சந்திரசேகரன், திருப்பூரில் அனிதா டெக்ஸ்காட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 17 ஆம் தேதியன்று, திருப்பூரில் உள்ள அனிதா டெக்ஸ்காட் நிறுவன வளாகம் உட்பட சென்னை, திருப்பூர் மற்றும் தாராபுரம் ஆகிய நகரங்களில் உள்ள எட்டு இடங்களில், வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி, எக்கச்சக்கமான ஆவணங்களைக் கைப்பற்றியது. தாராபுரத்தில் சந்திரசேகரனின் அண்ணன் கவின் நாகராஜ் வீட்டிலும், அவருடைய நண்பர் தனசேகர் ஆகியோர் வீடுகளிலும் இந்த ரெய்டு நடந்தது. இவர்களில் கவின் நாகராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், தனசேகர் தாராபுரம் நகர திமுக செயலாளராகவும் உள்ளனர். இவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்ததால், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் துாண்டுதலின்பேரில் இந்த ரெய்டு நடந்ததாக புகார் கிளம்பியது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரே முக்கியக் குறி என்பது பின்னால் தெரியவந்தது. மொத்தம் எட்டு இடங்களில் நடந்த ரெய்டுகளில், ரொக்கப்பணம் 11.5 கோடி ரூபாயும், கணக்கில் காட்டப்படாத வருமானம் 80 கோடி ரூபாய் அளவிலும் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது.

நமது மின்னம்பலத்தில் ‘அதிரடி ஐ.டி.ரெய்டுகள்...எதிர்க்கட்சிகளை முடக்கவா, தேர்தலை நேர்மையாக நடத்தவா?’’ என்று நாம் வெளியிட்டிருந்த கட்டுரையில் கூறப்பட்டதைப் போலவே, தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகவே இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசியலில் நேர்மை, ஊழல் எதிர்ப்பு கோஷங்களுடன் கட்சியை நடத்திவரும் கமலுக்கு இந்த ரெய்டும், அறிக்கையும் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை எதிர்த்து, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதுதான் இந்த ரெய்டுக்கு மிக முக்கியமான காரணமென்று அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, கோவை தெற்கில் கமலையும், தாராபுரத்தில் முருகனை எதிர்த்துப் போட்டியிடும் கயல்விழிக்கு ஆதரவாகப் பணி செய்வோரையும் முடக்குவதற்கான முயற்சிதான் இந்த ரெய்டு என்றும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் பரவின.

இதுபற்றி கமலிடம் உடனே கேட்டபோது, ‘முழுமையாக தகவல் வரட்டும்; அப்புறம் சொல்கிறேன்’ என்றார்.

வருமானவரித்துறையின் அறிக்கை வெளியான பின்பே, மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை, கோவையில் தாஜ் ஓட்டலில் நேற்று காலையில் வெளியிட்டார் கமல். தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களை அவரும், கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜூம் விரிவான விளக்கிய பின்பு, பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, ‘இதில் தேர்தல் அறிக்கை பற்றி கேளுங்கள்’ என்றார் கமல். ஆனால் விடாமல் நிருபர்கள் கேட்டதால் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

அப்போதும், ‘‘அவர் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் மட்டுமில்லை; தனி மனிதரும் கூட’’ என்று வழக்கமான குழப்பத்தோடுதான் அவர் பதில் துவங்கியது. அதன்பின்னும், ‘‘எங்கள் கட்சியில் அவர் சார்பில் எந்த கணக்கு முரணும் இருக்காது. அதற்கென்று சி.எப்.ஓ., இருக்கிறார். நீங்க 11ன்னு சொல்றீங்க. இன்னொருத்தர் எட்டுங்கிறாரு. ஒருத்தரு எண்பதுங்கிறாரு. சொல்றவர் எந்தக் கட்சியோ அதை வச்சு அவர் சொல்ற நம்பரும் மாறுது’’ என்று விட்டுக்கொடுக்காமல் முட்டுக்கொடுத்தார். இதைச் சொல்லும்போது, சற்று ஆவேசமான கமல், ‘‘மத்தியில ஆட்சியில இருக்குற கட்சிக்காரங்களைத் தவிர மத்தவுங்ககிட்ட எல்லாமே ரெய்டு நடத்துறாங்க!’’ என்று பட்டவர்த்தனமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

கமல் கோபப்பட்டது தெரிந்தும் சில நிருபர்கள் விடாமல், ‘‘போன மாதத்துலதான் நீங்களும் சந்திரசேகரும் பார்ட்னரா சேர்ந்து ராஜ்கமல் பிரண்டையர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ன்னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கீங்க. அதுக்குள்ள அவரோட வீட்டுல ரெய்டு நடந்திருக்கே...இதுக்கு அரசியல் பின்புலம் ஏதாவது இருக்கும்னு நினைக்கிறீங்களா?’’ என்று கேட்டனர். அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல், ‘‘நீங்க சொல்ற படி இது தேர்தல் நேர வியாதியாகவும் இருக்கலாம்!’’ என்று நாலடியார் ரேஞ்ச்சில் ஒரு பதில் சொன்னார்.

கொஞ்சமும் இரக்கம் காட்டாத கோவை பத்திரிக்கையாளர்கள், ‘‘நீங்க சரியா வரி செலுத்துறவரு. அதை அப்பப்போ பெருமையாவும் சொல்லிக்கிறவரு... உங்க கட்சி பொருளாளரே இப்போ வரி ஏய்ப்புல மாட்டிருக்காரே?’’ என்று கொக்கியைப் போட்டார்கள். அதற்கு, ‘‘அந்த ரெய்டு தனிநபர் மீது நடந்தது. எங்க கட்சி மேல ரெய்டு நடந்தா அதுக்கு சி.எப்.ஓ., பதில் சொல்வாரு!’’ என்றார் கமல். அப்போதும் விடாமல், ‘‘அவர் வரி ஏய்ப்பு செஞ்சார்ங்கிறது உண்மையா இருந்தா அவர் மேல நடவடிக்கை எடுப்பீங்களா?’’ என்றும் கடைசியாக ஒரு குண்டைப் போட்டனர். அதற்கு ‘‘கட்டாயம் எடுக்கப்படும்’’ என்று பதில் சொல்லி விட்டு, ‘‘நீங்க கேள்வி கேட்கிறதுக்காக ஒருத்தர் மேல நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!’’ என்றும் ஒரு பதிலைச் சொல்லி பத்திரிகையாளர்களைப் பதற விட்டார் கமல்.

சந்திரசேகரன் 80 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித்துறையே அறிக்கை வெளியிட்ட பின்பும், நேற்று வரையிலும் கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கமலின் நேர்மையைப் பற்றி சிலாகித்த நடுநிலையாளர்கள் பலரிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையில், சந்திரசேகரனின் நிறுவனத்துக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 451 கோடி ரூபாய் அளவுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் அம்மா பேபி கிட் போன்ற பொருட்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்த விபரமும் வெளியாகியுள்ளது.

மிக முக்கியமாக TRIPLE LAYER FACE MASK எனப்படும் மூன்று அடுக்கு முகக்கவசம், என் 95 மாஸ்க், PPE KIT எனப்படும் கொரோனா தடுப்பு கவசஉடை ஆகியவை மட்டும் 347 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு கொள்முதல் செய்ததில் இந்த நிறுவனத்துக்கே அதிகமான ஆர்டர் தரப்பட்டுள்ளது.

ஏழு கோடி மூன்றடுக்கு முகக்கவசம் வாங்கியதில் இந்த நிறுவனத்துக்கு மட்டும் 2.3 கோடிக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. அதேபோல என் 95 மாஸ்க்குகள் 77 லட்சத்தில் 3 லட்சமும், விலையுயர்ந்த கொரோனா தடுப்பு கவச உடைகள் 67 லட்சத்தில் 48 லட்சமும் இந்த நிறுவனத்திடம் வாங்கப்பட்டுள்ளது. இந்த கவச உடை ஆர்டர் மதிப்பு மட்டுமே 182 கோடியே 80 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய். கொரோனா வருவதற்கு முன்பே, 17.2 லட்சம் அம்மா பேபி கிட், 3.6 லட்சம் அம்மா நியூட்ரிசன் கிட் போன்றவற்றை 202 கோடியே 25 லட்சத்து 72 ஆயிரத்து 340 ரூபாய் மதிப்புக்கு சந்திரசேகரின் நிறுவனத்திடம் தமிழக அரசு வாங்கியிருக்கிறது. இதை எல்லாம் சேர்த்து மொத்தம் 451 கோடியே 33 லட்ச ரூபாய், இந்நிறுவனத்துக்கு அரசு பணம் கொடுத்துள்ளது. தமிழக அரசுக்கு மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, பீஹார், ஒடிஷா ஆகிய மாநிலங்களுக்கும் இந்த பொருள்களை அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் சப்ளை செய்திருக்கிறதும் தெரியவந்திருக்கிறது. இவற்றில் எல்லாம் சேர்த்து பல நுாறு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிந்தபின்பே ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் புட்டுப்புட்டு வைக்கின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக இவர்கள் சொல்வது, இந்த பொருள்களை நேரடியாக உற்பத்தி செய்யும் அளவுக்கு எந்தத் தொழிற்சாலையும், யூனிட்களும் இந்த நிறுவனத்துக்கு இல்லை என்பதுதான். வெளியில் ஆர்டர் கொடுத்து, அதை வாங்கி அரசிடம் கூடுதல் விலைக்கு விற்பதில் பல கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் விளையாடியிருக்கவும் வாய்ப்புள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொறுப்பிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், அதேபோல அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியுடன் இவர் இந்த ஆர்டர்களைப் பிடித்திருக்கலாம் என்பது இவர்களின் அடுத்த கட்ட விசாரணையாகத் தொடர்கிறது. கமலுக்கு ஒடிஷாவில் உள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததற்கும் சந்திரசேகரனே பின்னணி என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசியல் பின்புலம் இல்லாமல் இத்தனை மாநிலங்களில் ஒருவரால் இவ்வளவு கோடி மதிப்பில் ஆர்டர் பெற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், ‘‘கமலை பிஜேபியின் ‘பி’ டீம் என்று பொதுவெளியில் பலரும் பேசிவருகிறார்கள். நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் இத்தனை மாநிலங்களில் ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு மதிப்பிலான பொருள்களை விநியோகம் செய்ய டெண்டரே இல்லாமல் ஆர்டர் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அரசியல் பின்புலம் கண்டிப்பாகத் தேவை. இவருடைய நண்பர் கார்த்திக் ஸ்ரீதர் என்பவர், சென்னையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மென்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

துணைவேந்தர் சூரப்பாவும் அவரும் நண்பர்கள் என்று கூறி சில புகைப்படங்களும் வலம் வருகின்றன. கார்த்திக் ஸ்ரீதரின் நிறுவனத்துடன் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒரு ஒப்பந்தமும் போட்டுள்ளது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், மக்கள் நீதி மய்யத்துக்கு நிதி திரட்டித் தரும் மறைமுக முயற்சியாகவே இது கருதப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையில் இவ்வளவு கோடிக்கு ஆர்டர் கொடுத்திருப்பது, சந்திரசேகரனின் நண்பர் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறை ஒப்பந்தம் போட்டிருப்பது இதையெல்லாம் பார்த்தால், பாரதிய ஜனதா பரிந்துரையின் பேரில் அதிமுக அரசு இதைச் செய்திருக்கிறதா அல்லது அதிமுகவின் பி டீமாகவே மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

ஏனெனில் வானதி சீனிவாசன் கோவையில் ஜெயித்தால அங்கு ஒரு அதிகார மையமாக உருவெடுத்து விடுவார் என்று அங்குள்ள ஆளும்கட்சி விஐபி ஒருவர் கருதியே, கமலை அங்கு போட்டியிட அழைத்து வந்திருப்பதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய தொகுதியில் திமுக வாக்குகளைப் பிரிப்பதற்காக ஒரு இஸ்லாமிய வேட்பாளரை மக்கள் நீதி மய்ய வேட்பாளராக நிறுத்த வைத்ததும் அதே விஐபியின் கைங்கர்யம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில், கமலின் கட்சியில் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில பல ‘டீல்’கள் பெரிய அளவில் நடக்கின்றன என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் பல விஷயங்கள் தெளிவாகி விடும்!’’ என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

அவர் சொல்வதைப் போல, பணத்துக்காக கமல் எப்போதும் தன்னுடைய தன்மானத்தையோ, சுயத்தையோ விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரை அறிந்தவர்கள் பலரும் அறிந்த விஷயம். மிகவும் பண நெருக்கடியாக இருந்த காலகட்டத்தில் கூட, அவருக்கு அரசியல்ரீதியாக பெரும் தொகை கொடுக்க பலர் முன் வந்தும் அதைத் தட்டிக்கழித்தவர். ஆனால் இப்போது அரசியலில் கால் பதித்து விட்ட காரணத்தால், பின் வாங்கவும் முடியாமல், கட்சியை நடத்தவும் பணமில்லாமல் இத்தகைய மறைமுக விவகாரங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா அல்லது அவருக்கும் தெரிந்தே இவை நடக்கிறதா என்றும் கேள்வி எழுகின்றது.

சினிமாவில் இருக்கும் வரை கமல் நல்லவர், வல்லவர்...

அரசியலுக்கு வந்த பின்...கமல் நல்லவரா கெட்டவரா?

கருத்துகள் இல்லை: