செவ்வாய், 16 மார்ச், 2021

சகாயம் அரசியல் பேரவை சார்பில் 20 தொகுதிகளில் போட்டி

sagayam-ias-organisation-will-contest-in-20-constituencies
.hindutamil.in : செய்தியாளர்களிடம் பேசிய சகாயம்.தன்னுடைய அரசியல் பேரவை சார்பாக, 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, ஆதம்பாக்கத்தில் 'அரசியல் களம் காண்போம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தன்னை அரசியலில் ஈடுபட இளைஞர்கள் தொடர்ந்து அழைத்து வருவதாகவும், அவர்களின் கோரிக்கையைத் தற்போது ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். இதன்மூலம், அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.  இந்நிலையில், சென்னை, கோயம்பேட்டில் இன்று (மார்ச் 15) சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:,,

"2016-ல் தமிழகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்கிற பெருவேட்கை கொண்ட தமிழக இளைஞர்கள், அரசியலுக்கு நான் வர வேண்டும் என அழைத்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் மதுரையிலும் பேரணிகள், கூட்டங்களை நடத்தி என்னை அழைத்தனர். ஏழை, எளிய மக்களுக்கு என்னுடைய பணி உதவக்கூடும் என்பதால், ஐஏஎஸ் பணியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என நான் அவர்களிடம் கூறினேன். இப்போது அரசியல் மாற்றம் அல்ல, சமூக மாற்றம்தான் முக்கியம் என சொன்னேன். மக்களிடத்தில் சென்று சேவையாற்ற அறிவுறுத்தினேன்.

அதன்பின்னர், அவர்கள் சமூக மாற்றத்திற்கான பணியைச் செய்ய எத்தனித்தார்கள். பல்வேறு பணிகளைச் சமூக மாற்றத்திற்காகச் செய்தார்கள். இதன் அடிப்படையில், 2020 அக்டோபரில் என்னுடைய விருப்பப் பணி ஓய்வுக் கடிதத்தை தமிழக அரசிடம் வழங்கினேன். 2021, ஜனவரி மாதம் நான் அரசுப் பணியில் இருந்து விடுபட்டேன்".

இவ்வாறு சகாயம் பேசினார்.

மேலும், குறைவான கால அவகாசத்தில் கட்சியைப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்த அவர், தன்னுடைய சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய இரு ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அரசியல் பேரவை சார்பாக 20 தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிடுவதாகத் தெரிவித்த சகாயம், தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் 1 தொகுதியிலும் போட்டியிடும் என அறிவித்தார். அரசியல் பேரவை சார்பாகப் போட்டியிடும் 20 பேரும், இவ்விரு கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 20 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் சகாயம் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை: